உலகம்
துருக்கி நிலநடுக்கத்தில் 1300 பேர் பலி.. 20 ஆண்டுகளாக ஏற்படும் தொடர் நிலநடுக்கத்துக்கு காரணம் என்ன ?
மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.
பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 1,300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கியில் இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு 7.4 என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 17,000 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6.8 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 7.0 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 114 பேர் உயிரிழந்தனர்.
இப்படி கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இதுபோன்ற தொடர் நிலநடுக்கங்களுக்கு கண்ட நகர்வே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கி அமைந்திருக்கும் அனடோலியன் தட்டு அரேபியன் தட்டோடு அடிக்கடி மோதிக்கொள்வதால் இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்துக்கும் இதுவே காரணமாக இருந்துள்ளது. அதோடு வரும்காலங்களிலும் இதுபோன்ற நிலநடுக்கங்கள் நிகழலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!