உலகம்

15 கி.மீ பயணத்துக்கு தினமும் ஹெலிகாப்டர்.. இத்தனை கோடி செலவா ? -இம்ரான்கானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 2 வாரங்கள் மட்டுமே அந்நாட்டால் உணவு தானியங்களையும் கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் வெகுசீக்கிரத்தில் பாகிஸ்தான் திவாலாகிவிடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் இந்த பிரச்சனைகளுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான்தான் காரணம் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், நாடு இருக்கும் நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஹெலிகாப்டர் பயணித்ததற்காக மட்டும் சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், 2019 முதல் மார்ச் 2022 வரை, இஸ்லாமாபாத்தில் உள்ள தனது பானி காலா இல்லத்திலிருந்து பிரதமர் அலுவலகத்துக்கு 1,579.8 மணிநேரம் பயணிக்க இம்ரான் கான் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த விவிஐபி (VVIP) ஹெலிகாப்டர் பயணத்துக்காக மட்டுமே 1 பில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையேயான 15 கி.மீ தூரத்தைக் கடக்க இம்ரான் கான் தினமும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருகிறார் என முன்னர் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Also Read: 72.48 கோடி ரூபாய் போனஸ்.. 30 % சம்பள உயர்வு... பணத்தை மலை போல குவித்து ஊழியர்களை அதிரவைத்த சீன நிறுவனம்!