உலகம்

72.48 கோடி ரூபாய் போனஸ்.. 30 % சம்பள உயர்வு... பணத்தை மலை போல குவித்து ஊழியர்களை அதிரவைத்த சீன நிறுவனம்!

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவரும் நிலையில், சீனா நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு 72.48 கோடி ரூபாய் அளவு போனஸ் அளித்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹெனன் மைன் என்ற நிறுவனம் கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்து மொத்த வருவாய் 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த நிறுவனம் ஊழியர்களுக்காக ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் 72.48 கோடி ரூபாய் பணத்தை மலை போல குவித்து வைத்து அதனை ஊழியர்களுக்கு போனஸாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதோடு நிற்காத அந்த நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் 30 சதவிகிதம் சம்பள உயர்வையும் அறிவித்து ஊழியர்களை மலைக்கவைத்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read: "இதை பார்த்தால் டி காக் IPL தொடரிலிருந்தே விலகிவிடுவார்" -தென்னாப்பிரிக்க வீரரை கலாய்த்த கெளதம் கம்பீர் !