உலகம்

“தன்பால் ஈர்ப்பு ஒன்றும் குற்றம் இல்லை..” - போப் பிரான்சிஸ் பேச்சுக்கு வலுக்கும் ஆதரவும், எதிர்ப்பும் !

ஓரின சேர்க்கை என்பது பெரும் பாவம் என்று பல்வேறு மதங்கள் கூறிவருகிறது. பெண் ஆணுடனும், ஆண் பெண்ணுடனும் மட்டுமே சேர வேண்டும் என்று சில மதங்கள், சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் காலப்போக்கில் பகுத்தறிவு சிந்தனை தோன்ற தொடங்கியதில் இருந்து இது மாற தொடங்கியது.

இவ்வளவு ஏன் இந்தியாவில் கூட இது எல்லாம் பெரும் பாவச்செயல் என்று சொல்லும் ஆட்களும் உண்டு. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தங்கள் மகனோ மகளோ ஓரின சேர்க்கையாளர்களாக இருந்தால் அவர்களை வீட்டை விட்டு துரத்தவோ, அல்லது கொலை செய்யவோ பல பெற்றோர்கள் தயக்கம் காட்டியது இல்லை.

இதற்காக பல்வேறு சிந்தனையாளர்கள் கருத்து கூறி கூறி, தற்போது காலம் மாறி வருகிறது. இருப்பினும் கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து என சில மதங்கள், மதவாதிகள் இதனை இன்னும் ஏற்க மறுத்து வருகின்றனர். எனினும் பலரும் அதையும் மீறி சேர்ந்து வாழ்கின்றனர். அண்மையில் கூட கேரளாவில் இஸ்லாமிய லெஸ்பியன் ஜோடி பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு திருமணம் செய்தனர்.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கி வருகிறது. இதனை ஏற்று சில பெற்றோர்கள் இது ஹார்மோன் மாற்றம் என்பதை உணர்ந்து தங்கள் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வருகின்றனர். இருப்பினும் இப்போதும்கூட பல பெற்றோர்கள் இதற்கு எதிராகவே இருக்கின்றனர்.

இந்த நிலையில் கிறிஸ்துவ மத நூலான பைபிளில் ஓரின சேர்க்கை என்பது பாவச்செயல் என்று குறிப்பிட்டிருக்கும் நிலையில், தற்போது ஓரின சேர்க்கை என்பது குற்றச் செயல் அல்ல என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "உலகிலுள்ள சில நாடுகளில் இருக்கும் கத்தோலிக்க பிஷப்கள் ஓரின சேர்க்கையாளர்களை தண்டிக்கும் அல்லது துன்புறுத்தும் சட்டங்களை ஆதரிக்கின்றனர். இது போன்று செயல்கள் பாவம் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஓரின சேர்க்கையாளர்கள் உட்பட அனைவரின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் பிஷப்கள் தங்கள் மனநிலையை மாற்றி கொள்ள வேண்டியது அவசியம்.

கடவுள் அனைவரையும் தனது குழந்தையாகவே கருதுகிறார்; அவர் அனைவரையும் நேசிக்கிறார்; நேசிக்கும்படி கூறியுள்ளார். ஓரின சேர்க்கை ஒன்றும் குற்றச்செயல் அல்ல. எனவே, ஓரின சேர்க்கையில் ஈடுபடும் நபர்களை சர்ச்சுக்குள் வருவதை பிஷப்கள் வரவேற்க வேண்டும்'' என்றார்.

போப் பிரான்சிசின் இந்த பேச்சு தற்போது பிஷப்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு சிலர் இவரது பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு கணக்கெடுப்பின்படி சுமார் 67 நாடுகளில் ஓரின சேர்க்கை செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது. முன்னேறிய நாடு என்று கூறப்படும் அமெரிக்காவில் கூட 12க்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் இன்னும் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அமெரிக்கா சென்றும் திருந்தாத இந்தியர்கள்.. சாதிய பாகுபாடுக்கு எதிராக சியாட்டில் நகரில் அவசர சட்டம் !