உலகம்

ஒருவேளை உணவுக்காக அடித்துக்கொள்ளும் மக்கள்.. அடுத்த இலங்கையான பாகிஸ்தான்.. Video வெளியாகி அதிர்ச்சி !

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 2 வாரங்கள் மட்டுமே அந்நாட்டால் உணவு தானியங்களையும் கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் வெகுசீக்கிரத்தில் பாகிஸ்தான் திவாலாகிவிடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு பொதுமக்கள் உணவுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் பரிதாப நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,200-க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ.175க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.300க்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுவதால் அங்கு பொதுமக்களின் நிலை கவலைகிடமாகியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நகரில் கோதுமையை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், மக்கள் முண்டியடித்துக் கொண்டு கோதுமை மூட்டைகளை வாங்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டு கோதுமை மூட்டைகளை எடுத்துக்கொண்டு ஓடுகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியும் வருகின்றனர். இந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்பவர்களுக்காக"- இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அமைச்சர் மா.சு!