உலகம்

சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்த மலேசிய முன்னாள் பிரதமர்.. 25 ஆண்டுகள் பதவி வகித்தவருக்கு நேர்ந்த சோகம் !

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி என்றால் அது மகாதீர் தான். 1981 முதல் 2003 வரை மலேசியாவின் பிரதமராக பதவி வகித்தார். இவரின் ஆட்சி காலத்தில்தான் மலேஷியா கிழக்கு ஆசியாவின் முக்கிய பொருளாதார சக்தியாக எழுந்தது.

அதன்பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு மலேசியாவில் அரசியல் நிலை மோசமடைந்த நிலையில், மீண்டும் அரசியலில் முன்னிலைக்கு வந்த மகாதீர் தனது 93-வது வயதில் மீண்டும் மலேஷியாவில் பிரதமராக பதவியேற்றார். மூன்று ஆண்டுகள் நீடித்த இவரின் ஆட்சி கூட்டணி குழப்பம் காரணமாக முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் மலேசியாவில் தற்போது 15-ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தான் போட்டியிட்டு வென்ற லங்காவி தொகுதியில் மகாதீர் மீண்டும் வேட்பாளராக நின்றார்.

இந்த தேர்தலில் அவர் எளிதாக வெற்றிபெற்று மலேசிய அரசியலை தீர்மானிக்கும் நபராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்முறை அவருக்கு வெறும் 4,566 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவர் இந்த தேர்தலில் டெபாசிட் இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரிக்கத்தான் கூட்டணி வேட்பாளர் 25,463 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் மகாதீரால் 4-வது இடமே பிடிக்கமுடிந்தது.

கடந்த 1969ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வென்ற மகாதீர் அதன்பின்னர் தேர்தலில் தோல்வியே தழுவியதில்லை. இந்த நிலையில், அவர் டெபாசிட் இழந்தது மலேசிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அண்ணாமலையை விமர்சித்து பதிவிட்ட கருத்து எதிரொலி.. காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து நீக்கி பாஜக அறிவிப்பு!