உலகம்

"இது நடக்கும்வரை ட்விட்டர் அலுவலகத்தில்தான் உறங்குவேன்" - கடும் சிக்கலில் தவிக்கும் எலான் மஸ்க் !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் 50% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு எலான் மஸ்க்கின் இது போன்ற செயல்கள் பிடிக்காமல் யேல் ரோத், ராபின் வீலர் ஆகிய இரண்டு உயர் அதிகாரிகள் விளம்பரதாரர்கள் பிரச்சினையை முன்வைத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ட்விட்டரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லீ கிஸ்னர், பாதுகாப்பு அலுவலர் டேமியன் கீரன், தலைமை கம்ப்ளையன்ஸ் அலுவலர் மேரியான் ஃபோகார்டி ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு சிக்கல்களில் ட்விட்டர் நிறுவனம் சிக்கிக்கொண்டுள்ளது.

மேலும், 2021-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ட்விட்டர் 66 மில்லியன்கள் டாலர் நஷ்டத்தை சந்தித்த நிலையில், ஜூன் 30-ம் தேதி வெளியான இரண்டாவது காலாண்டு அறிக்கையில் 270 மில்லியன் டாலர்கள் நிகர இழப்பை சந்தித்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. அதோடு ட்விட்டர் நிறுவனம் திவாலாக வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க் தொலைபேசி உரையாடலில் சில ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்தும் சரியாகும் வரை நான் அலுவலகத்திலே இருப்பேன் என எலான் மஸ்க் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ட்விட்டர் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் தான் இருக்கிறேன். அனைத்தும் சரியாகும் வரை இங்கு வேலைகளை கவனிப்பேன். தூங்கவும் செய்வேன்" என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ட்விட்டர் ஊழியர்கள் 12 மணி நேரம் வேலைசெய்யவேண்டும் என எலான் மஸ்க் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.