உலகம்

துபாயில் 'புத்தக' வடிவில் பிரம்மாண்ட நூலகம்.. 1000 தமிழ் புத்தகங்கள் : அசத்திய அமைச்சர் அன்பில் மகேஸ்!

துபாயில், அல் ஜடாப் பகுதியில் உள்ளது ஃஷேக் முகமது பின் ரிஷித் நூலகம். சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நூலகத்தை துபாய் அரசு திறந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து புத்தகங்களைப் படிக்க முடியும்.

மேலும் புத்தக வடிவத்திலேயே கட்டப்பட்டுள்ளதால் புத்தக காதலர்களை இந்த நூலகம் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் கூட்டங்கள் நடத்துவதற்கும், கண்காட்சிகள் நடத்துவதற்கும் என்று தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது இந்த நூலகத்தின் தரை தளத்தில் புத்தகக் கடை, வணிக நூலகம், பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகில் உள்ள அனைத்து மொழி சார்ந்த நூல்களும் இங்கு கிடைக்கும்.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசார்பில் ஃஷேக் முகமது பின் ரிஷித் நூலகத்திற்கு 1000 புத்தகங்களை வழங்கியுள்ளார்.

இதில், பழந்தமிழ் இலக்கியம், வரலாற்றுப் புத்தகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கலைஞர் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளது. துபாயில் கணிசமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த 1000 புத்தகங்கள் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

Also Read: "இறைவன் பெயரால் 'இரத்தம்' குடிப்பது..": இணையத்தில் வைரலாகி வரும் கோவை காவல்துறை ஆணையரின் கவிதை!