உலகம்

நடுரோட்டில் அடிதடி சண்டை.. அதி வேகமாக வந்த கார் மோதியதில் 70 வயது மூதாட்டி உட்பட 4 பேர் பலி !

திருமண நிகழ்வில் இரு தரப்பினர் நடுரோட்டில் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஸ்பெயினில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் தலைநகராக அமைந்திருப்பது மேட்ரிட். இந்த பகுதிக்கு அருகே டோரெஜோன் டி ஆர்டோஸ் என்றார் இடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹோட்டல் ஒன்றில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் திடீரென்று இருவேறு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.

அந்த பிரச்னை காரணமாக இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடிக்கொண்டனர். மேலும் இவர்களது வாய் தகராறு கை கலப்பாக மாறியது. அப்போது அவர்கள் ஹோட்டலுக்கு வெளியே வந்து சண்டை போட்டுக்கொண்டனர். அந்த சண்டையை பலரும் விலக்கி விடவும் பார்த்தனர்.

அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த கார் சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது சட்டென்று மோதியது. இந்த திடீர் மோதல் விபத்தில் 70 வயதுடைய மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதோடு 60 வயது முதியவர், 40 வயது இளைஞர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உடனிருந்தவர்கள் சிலருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழந்தவர்கள் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்தும் விசாரித்து வந்தனர். பின்னர், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 கி.மீ., தூரத்தில் விபத்து ஏற்படுத்தி சென்ற தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண நிகழ்வில் இரு தரப்பினர் நடுரோட்டில் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?