உலகம்

வரலாறு காணாத வறட்சி.. பரிதாபமாக உயிரிழந்த 205 யானைகள்.. அரசின் அறிவிப்பால் உலகநாடுகள் அதிர்ச்சி !

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் பெருமழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது.

அதிலும் ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பொழியாத சூழலில் இந்தாண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. அதன் தாக்கம் உலகின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி அமைந்துள்ள கென்யாவையும் விட்டுவைக்கவில்லை.

இந்த வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதோடு கென்ய காடுகளில் உள்ள விலங்குகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் மட்டும் சுமார் 205 யானைகள், 512 காட்டுஎருமைகள், 381 வரிக்குதிரைகள், 12 ஒட்டக சிவிங்கி போன்ற பல்வேறு விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆப்ரிக்க காடுகளில் வேட்டை போன்ற காரணங்களால் யானைகள் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ள நிலையில், தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக யானைகள் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டின் கணக்கின்படி, 36,000 யானைகள் தான் உயிருடன் இருப்பதாக கென்ய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் பருவநிலை மாற்றம் இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐ.நா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Also Read: 100 சுற்றுலாப்பயணிகளை கடத்திய அமேசான் பழங்குடிகள்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. பதைபதைப்பில் பெரு!