உலகம்

'Twitter India'வில் 90% பேர் வேலைநீக்கம்? தினமும் 4 மில்லியன் டாலர் இழப்பு! -எலான் மஸ்க்-ன் பதில் என்ன ?

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு மெயில் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "நீங்கள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தாலோ அல்லது அலுவலகத்திற்கு ஏற்கெனவே வந்துவிட்டாலோ வீட்டுக்குத் திரும்பலாம். வெள்ளிக்கிழமை மாலைக்குள் நீங்கள் வேலையில் இருக்கிறீர்களா இல்லையா என்பது பற்றி உங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.ங்கள் வேலையில் நீடிக்கிறீர்கள் என்றால் அலுவலக இமெயில் முகவரிக்கு மெயில் அனுப்பப்படும். நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதன் விவரம் உங்களது தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை எலான் மஸ்க் தற்போது அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "ட்விட்டர் நிறுவனத்துக்கு நாள்தோறும் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆட்குறைப்பு செய்வதைத்தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான பணி நீக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி தேவைப்படுவதை விட ஊழியர்களுக்கு 50% அதிகமான தொகை வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

இதனிடையே இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் வரை வேலை செய்துவந்த நிலையில், அவர்களில் 90% பணியாளர்கள் பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில், அதற்கு எதிரான சட்டங்கள் வகுக்கவேண்டும் என்றும் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: மரியாதையை காப்பாற்ற 29 ஆயிரம் தண்டம்.. ஆபாச படம் பார்த்த 83 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம் !