உலகம்

மூளைச்சாவு அடைந்த நபர்.. "உறுப்பு தானத்துக்கு தயாரானபோது நடந்த medical miracle" :அமெரிக்காவில் ஆச்சர்யம்!

அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் ரியான் மார்லோ (37). இவர் அந்த பகுதியிலுள்ள தேவாலயத்தில் பாஸ்டராக (போதகர்) இருந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு ஒருவித பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின் போது கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

கோமாவில் இருந்த இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் எந்த வித முன்னேற்றமும் இல்லை என்பதையறிந்த மருத்துவர்கள் மேற்கொண்டு பரிசோதனை செய்ததில் அவர் மூளை சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உறவினர்களிடம் இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்தபோது, அவர் ஏற்கனவே உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் மூளைச்சாவு அடைந்திருந்த ரியானின் உடல் உறுப்புகளை ஆபரேஷன் செய்து எடுப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மருத்துவமனை மேற்கொண்டு வந்தது.

இதனிடையே அவரை இறுதியாக காணவேண்டும் என்று அவரது குடும்பத்தினர், ரியனின் குழந்தைகளை கூட்டி வந்தனர். அப்போது அவருக்கு அருகே குழந்தைகள் சென்று சத்தம் கொடுக்கவே அவரது உடலில் ஏதோ அசைவு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட உறவினர்கள் உடனே மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் வந்து மீண்டும் சோதனை செய்ததில் அவரது மூளை செயல்படத்தொடங்கியுள்ளது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் உறுப்புக்கான ஆபரேஷனை மருத்துவர்கள் ரத்து செய்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கர்நாடகா : வெள்ளத்தில் சிக்கிய வீடு.. தவித்த தாய், பச்சிளம் குழந்தை.. ஓட்டை உடைத்து காப்பாற்றிய மக்கள் !