உலகம்

உடல் முழுக்க தங்க நகைகள் அணிந்து புதைக்கப்பட்ட பெண்.. கல்லறையை தோண்டி உடலை கைப்பற்றிய ஆய்வாளர்கள் !

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்ள ஒராடியா நகரில் கடந்த ஓராண்டாக டாரி க்ரூசிலார் அருங்காட்சியகத்தின் சார்பில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அப்போது அங்குள்ள மைதானம் ஒன்றில் அகழாய்வு நடந்த போது அது ஒரு பழங்கால கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் உற்சாகம் அடைந்த ஆய்வாளர்கள் அந்த இடத்தை முழுமையாக தோண்டினர். அப்போது அங்குள்ள பழங்கால கல்லறையை திறந்தபோது ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் ஆடிப்போயினர். ஏனெனில் அந்த கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தவர் முழுக்க முழுக்க தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரின் எலும்புக் கூட்டை சூழ்ந்து தங்க நகைகள் இருந்த நிலையில், எலும்புக் கூட்டை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அது 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண் என்பது தெரியவந்தது. மேலும் அந்த எலும்பு கூடு தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட தகவலில், அந்த பெண்ணின் எலும்புக் கூட்டில் சுமார் 169 தங்க மோதிரங்களும், வளையல்களும் இருந்துள்ளன என்றும், மிகுந்த செல்வ செழிப்புடன் அந்தப் பெண் வாழ்ந்திருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

பெண்ணின் எலும்பு கூட்டோடு கிடைத்த நகைகள் பழங்காலத்தை சேர்ந்தது என்பதால் அவை விலைமதிப்பற்றது என்றும், அந்த நகைகள் அருங்காட்சியத்துக்கு கொண்டு சென்று மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Also Read: “ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுக்கு முந்தைய தங்க கிரீடம் கண்டுபிடிப்பு”: செல்வ செழிப்புடன் வாழ்ந்த தமிழர்கள்!