உலகம்

பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தது பாகிஸ்தான்..கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் நடவடிக்கை! மக்கள் பாராட்டு!

கொரோனா, உக்ரைன்-ரஷ்யா போர் போன்ற காரணங்களால் இலங்கையை போல பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்றுமதி இறக்குமதிக்கான வித்தியாசம் அதிகரித்ததால் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டது. கடன் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த சர்வதேச நாணய நிதியம் பெட்ரோல்-டீசல் விலையை அதிகரிக்கவேண்டும், மானியங்களை குறைக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தது.

முதலில் பாகிஸ்தான் அரசு இதற்கு மறுத்த நிலையில், வேறு வழியின்றி அங்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை அமல்படுத்தியது. ஏற்கனவே பொருளாதார பாதிப்பில் இருந்த பொதுமக்களை இது கடுமையாக பாதித்தது. மேலும் பெட்ரோல் விலை அதிகரித்ததால் அங்கு பணவீக்கம் அதிகரித்தது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நேற்று (2022, ஜூலை 14) அறிவித்தார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.40.54 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஷாபாஸ் ஷெரீப், ஆட்சிக்கு வந்ததும், எண்ணெய் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இப்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.