உலகம்
பாலியல் புகாருக்கு ஆளானவருக்கு நாடாளுமன்ற பதவி.. போரிஸ் ஜான்சன் பதவி விலகளுக்கு உண்மையான காரணம் என்ன?
பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். பிரிட்டனின் பழமைவாத கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரின் இங்கிதமற்ற நடத்தையும் பேச்சும் கேலிக்குள்ளானது. மிக முக்கியமான அரசியல் நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பணியை செய்து கொடுத்தார்.
பல சிக்கல்கள், கேலிகள், மூடத்தனங்களைக் கடந்து மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் தற்போது ஏன் பதவி விலகுகிறார்?
ஏனெனில் அவரின் ஆட்சிக் கவிழும் நிலைக்கு வந்திருக்கிறது. அவர் உருவாக்கிய அமைச்சரவையில் பலர் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்கள். போரிஸ் ஜான்சனின் தலைமையில் இயங்க முடியாதென அறிவித்திருக்கிறார்கள். ஆட்சியே நிகழ முடியாதளவுக்கு ராஜிநாமாக்கள் தொடர்ந்திருக்கின்றன. ஆட்சியே கவிழும் கட்டத்தை எட்டிவிட்டதால் போரிஸ் ஜான்சன் தன் பதவி விலகலை அறிவித்திருக்கிறார்.
கட்சியினருக்கு போரிஸ் ஜான்சன் மீது என்ன கோபம்?
கடந்த சில மாதங்களில் பல முறைகேடுகள் போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
நாடே கோவிட் ஊரடங்கில் இருக்கும்போது தன்னுடைய அலுவலகத்தில்‘பார்ட்டி’கள் நடத்தியிருக்கிறார். அதற்காக அவருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன. அதே போல நன்கொடையாகக் கிடைத்தப் பணத்தைக் கொண்டு தன் வீட்டை மறுவடிவமைத்திருக்கிறார். அவருடைய நண்பரின் பதவி போய்விடக் கூடாதென மக்கள்பிரதிநிதிகள் அந்த நபருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார். பாலியல் அச்சுறுத்தல் புகாருக்கு ஆளான ஒருவரை நாடாளுமன்ற அதிகாரியாக அவர் நியமித்திருக்கிறார்.
இக்காரணங்களாலும் போரிஸ் ஜான்சனிடம் தலைமைப் பண்பு இல்லாததாலும் பதவி விலகியதாக அமைச்சர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இக்காரணங்கள் உண்மையா?
போரிஸ் ஜான்சன் ஒன்றும் 2022-ல் பிரதமராக பதவி ஏற்கவில்லை. 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள். தொடர்ந்து மாதக் கணக்கிலும் வருடக் கணக்கிலும் போரிஸ் ஜான்சனுடன் பணியாற்றும் அமைச்சர்களுக்கு போரிஸ் ஜான்சனின் நடத்தை தெரியாதா? அவரிடம் தலைமைப் பண்பு இல்லையென்பதை இத்தனை காலத்துக்குப் பிறகுதான் கண்டுபிடித்தார்களா?
போரிஸ் ஜான்சன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததோ பாலியல் குற்றச்சாட்டுக் கொண்ட நபரை பதவியில் நியமித்ததோ அமைச்சர்களை பாதிக்குமளவுக்கான பிரச்சினைகளா? அந்த நபரை போரிஸ் ஜான்சன் நியமனம் செய்த அன்றே ஏன் அமைச்சர்கள் ராஜிநாமா செய்யவில்லை?
பல கேள்விகள் இருக்கின்றன. ஆனால் ஆங்கில இணைய இதழ்கள் பலவற்றிலும் இந்தக் காரணங்கள் மட்டும்தான் தொடக்கப் பத்திகளை நிறைத்திருக்கின்றன.
உண்மையானக் காரணங்கள் வேறு.
அக்காரணங்கள் பொருளாதாரக் காரணங்கள்!
கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் பிரிட்டனில் உயர்ந்து 9.1%-த்தைத் தொட்டிருக்கிறது. முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் G7 கூட்டமைப்பில் உள்ள நாடுகளிலேயே அதிக பணவீக்கம் பிரிட்டனில்தான் உள்ளது.
பொருளாதாரச் சிக்கலை சரி செய்யவென எரிபொருள் வரியை போரிஸ் ஜான்சன் குறைத்துப் பார்த்தார். முடியவில்லை. மீண்டும் ஏப்ரல் மாதத்தில் வரி உயர்ந்தது. மக்களின் வாழ்க்கைக்கான செலவு பெருமளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இத்தகையப் பொருளாதாரச் சிக்கலுக்கு போரிஸ் ஜான்சன் காரணமல்ல. சொல்லப் போனால் இத்தகையப் பொருளாதார வீழ்ச்சி உலகளவில் பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டே வருகிறது. அதன் விளைவாகாத்தான் தனியாக வணிகம் பெறுவதற்கான ஐரோப்பிய யூனியன் வெளியேற்றத்தை ‘பிற நாட்டவரின் வருகையால் பொருளாதாரம் சீரழிவதாக’ சொல்லி போரிஸ் ஜான்சன் பிரசாரம் செய்து அதிகாரம் ஏறினார்.
உலகளவில் பரவிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கோவிட் தொற்று அதிகரித்தது. அதற்குப் பிறகு அமெரிக்கா உருவாக்கிய உக்ரெயின் சிக்கல் நெருக்கடியை இன்னும் தீவிரப்படுத்தியது. இறுதியில் பிரிட்டன் நொறுங்கி வீழும் கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
பிரிட்டன் மட்டுமின்றி, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா எனப் பல இடங்களிலும் பொருளாதாரம் நொறுங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைப் போலவே மொத்தக் குற்றச்சாட்டும் ஆளுபவர் மீதானதாக பிரிட்டன் நாட்டிலும் சுருக்கப்பட்டிருக்கிறது.
போரிஸ் ஜான்சன் தலைமைப் பண்பு இல்லாததால்தான் பிரிட்டனின் பொருளாதாரம் நொறுங்கியதாக சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. உண்மை என்னவெனில் முதலாளிகளும் நிறுவனங்களும் கொழுத்துத் திளைக்கும் பொருளாதார முறை பல்லிளித்துக் கொண்டிருப்பதுதான்.
பொருளாதாரக் கொள்கை மாறாமல் ஆட்சியாளர்கள் மட்டும் மாறுவதால் மாற்றங்கள் நேர்ந்துவிடுவதில்லை. இந்த உண்மையை நோக்கி உலகம் வேகம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!