உலகம்

சமோசா விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆப்கான் செய்தியாளர்.. தாலிபான்களால் தொடரும் அவலம்! - பின்னணி என்ன?

கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு செய்தி என்றால், அது ஆப்கானிஸ்தான்-தாலிபான் இடையேயான போர் தான். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறியபின் ஆப்கானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த போர், கடந்த ஆண்டு நிறைவுற்றது. மேலும் ஆப்கானை தனது கட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்கள், தாங்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாக அறிவித்தனர்.

ஆப்கான் நாடு தாலிபான்கள் கைப்பிடிக்குள் வந்த பிறகு அங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு என்று படிப்பு, வெளியே தனியாக செல்ல கூடாது, ஷரியத் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது. இதனால் சில உலக நாடுகளின் ஆதரவையும் இழந்தது. மேலும் அரசு அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்தல், ஊடக சுதந்திரம் பறித்தல் போன்ற அட்டூழியங்களையும் செய்து வந்தது.

இந்த நிலையில் தற்போது, ஆப்கானின் பிரபல ஊடங்களில் செய்தியாளராகவும், நெறியாளராகவும் பணியாற்றிய மூசா முகமது என்ற பத்திரிகையாளர், சாலை ஓரம் ஒன்றில் சமோசா விற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கான் செய்தியாளர் மூசா முகமது

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், அங்கு வசித்து வந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. அந்த வகையில், தற்போது பிரபல பத்திரிகையாளர் ஒருவர், வேறு வருமானம் இன்றி, தனது குடும்பத்திற்காக சாலை ஓரத்தில் சமோசா விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை முந்தைய ஆட்சியில் அரசுப் பணியில் இருந்த கபீர் ஹக்மால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "மூசா முகமது ஆப்கானிஸ்தானின் பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, நெறியாளராக பணியாற்றியவர். தற்போது அவருக்கு தனது குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இருந்தும், அதற்கான வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார். அதனால், சாலை ஓரங்களில் ஏதேனும் உணவுப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்துகிறார். குடியரசு ஆட்சி வீழ்ந்த பிறகு ஆப்கான் மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு 'ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கம்' கூட்டாக இணைந்து ஆப்கானில் ஊடகங்களின் நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, சுமார் 231 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 6,400க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஐந்து பெண் பத்திரிகையாளர்களில் 4 பேர் இப்போது வேலை இல்லாமல் இருக்கின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பத்திரிகை அழியும் அபாயத்தில் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

Also Read: Profile Picture-க்கும் இனி Privacy.. புதிய Update-களை அள்ளிக்கொடுத்த Whatsapp நிறுவனம்!