உலகம்
எரிபொருள் விலை உயர்வால் 4000 பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம்.. சீனாவை கண்டித்த WHO!
வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கொரோனா உறுதி!
வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து கொரோனாவை ஒழிப்போம் என உறுதி பூண்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தேசிய அளவில் அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார். இதேபோன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வடகொரியாவில் தொற்று இல்லை என இதுவரை தகவல் வெளிவந்த நிலையில், ஒருவருக்கு பாதிப்பு உறுதியான சூழலில் நாடு முழுவதும் அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருப்பது உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது.
நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து அதிபர் விருப்பம்!
வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய, பின்லாந்து அதிபர் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ இராணுவக் கூட்டணியில் பின்லாந்து சேருவதற்கு அதிபர் சவ்லி நினிஸ்டோ விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து, பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றம் இதுவாகும். இந்த முடிவுக்கு பின்லாந்து அரசும் நாடாளுமன்றமும் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டிப்பு!
சீனாவின் கொரோனா இல்லா நிலை வேண்டும் என்ற கொள்கை நிலையானது அல்ல என கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவுக்கு எதிரான உங்கள் யுக்தியை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சீனாவை கண்டித்துள்ளது. உலகமெங்கும் கொரோனாவை பரப்பிய சீனா, தற்போது அந்த தொற்றின்பிடியில் சிக்கித்தவிக்கிறது. இந்த நிலையில் அங்கு ‘ஜீரோ கோவிட்’ கொள்கையை சீன அரசு அமல்படுத்தி உள்ளது. ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதுதான் இதன் நோக்கம் ஆகும். இதற்காக கடுமையான ஊரடங்குகள், பொது முடக்கங்கள் ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அமலில் உள்ளது.
ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்!
ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 350-க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் சுமார் 3,000 முதல் 4,000 பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அந்நாட்டின் எரிபொருள் விநியோகஸ்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சீனாவில் விமானம் தீ பிடித்து விபத்து!
சீனாவின் சோங்கிவிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் விமானம் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. சீனாவின் சோங்கிவிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்று இன்று காலை 8. மணி அளவில் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே விமானத்தில் இருந்த 113 பயணிகள், 9 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!