உலகம்
200 கண்ணிவெடிகளை கண்டறிந்த பேட்ரன்.. பதக்கம் வழங்கி கவுரவிப்பு : சீன அதிபருக்கு மூளையில் பாதிப்பு ?
1) போர் முனையில் 200 கண்ணிவெடிகளை கண்டறிந்த பேட்ரனுக்கு பதக்கம் !
உக்ரைன் நாட்டின் மீது 9 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா தொடுத்துள்ள போர் நீடித்து வருகிறது. ரஷ்ய படையெடுப்பினை முன்னிட்டு உக்ரைனில் பதுக்கி வைக்கப்படும் கண்ணிவெடிகளை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதில் ஜாக் ரஸ்செல் வகையை சேர்ந்த பேட்ரன் என பெயரிடப்பட்ட இரண்டரை வயது மோப்ப நாய் ஒன்று திறமையாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை உக்ரைனில் 200 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து கண்டறிந்து உள்ளது. வீரர்களை கவுரவிக்க நடந்த பாராட்டு விழாவில் பேட்ரன் மற்றும் அதன் உரிமையாளருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பதக்கம் வழங்கினார்.
2) சீன அதிபருக்கு மூளையில் பாதிப்பு?
சீன அதிபர் ஷீ ஜிங்பிங் (68) , கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரை, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.
இதையடுத்து அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின. இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் அவருடைய சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், சீன மருத்துவ முறைகளின்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
3) ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய உக்ரைன் ஆபரேட்டர்
ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள நோவோப்ஸ்கோவ் மையம் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம், தனது சப்ளையை நிறுத்தி உள்ளது. எனவே, ரஷ்யா தனது இயற்கை எரிவாயுவை ஐரோப்பாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவற்கு, உக்ரைனில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். உக்ரைன் வழியாக மேற்கு ஐரோப்பாவிற்கு செல்லும் ரஷ்ய எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை இந்த நோவோப்ஸ்கோவ் மையம் கையாளுகிறது.
4) பாகிஸ்தானில் சர்க்கரை ஏற்றுமதிக்கு முழு தடை!
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தெரிவித்தார். “உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, சர்க்கரை ஏற்றுமதியை முழுமையாக தடை செய்து உத்தரவிட்டுள்ளேன். சர்க்கரை கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
5) ஆஸ்திரியாவில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரெயில் வியன்னா அருகே உள்ள முயன்சென்டார்ப் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!