உலகம்
“உலகத்தின் நுரையீரலை பிடுங்கி எறியும் பிரேசில் அதிபர்”: 1013 km தூரம் அமேசானில் காடழிப்பு; பகீர் பின்னணி?
உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா வைரஸால் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாகி, அதன் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. உயிரிழப்புகள், பொருளாதார நெருக்கடி என பல அடுத்தடுத்த சரிவுகள் பொதுமக்களை இன்னும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படியான சூழலில் இயற்கைக்கு எதிரான பல செயல்களால் மேலும் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகத்தின் நுரையீரல் என்றால் அது அமேசான் காடுகள் தான். புவிக்கு தேவையான ஆக்ஸிஜனில் 20% க்கும் மேல் அமேசான் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது. சுமார் 9 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படும் அமேசான் காட்டின் பெரும்பகுதி பிரேசிலில் உள்ளது. இந்தநிலையில், கொரோனா சூழலைப் பயன்படுத்தி காடுகளை அழிக்கும் வேலை தீவிரமாக்கப்பட்டுள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமேசானில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1,40,000 கால்பந்து மைதானங்களுக்கு சமமான அளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்த வருடம் சுமார் 64% காடழிப்பு நடந்துள்ளது. பிரேசிலின் அதிபராக உள்ள வலதுசாரி ஆதரவாளரான ஜெயர் போல்சனோரா ஆட்சிக்கு வந்த பிறகு தான் காடுகள் அழிப்பு என்பது சுமார் 75% அதிகரித்துள்ளது. அதாவது ஏப்ரலில் மட்டும், குறைந்தது 1,013 கிமீ² அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டன. இயற்கைக்கு எதிரான இந்த செயல் கவலை அழிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கவேட்டைக்காக சுரங்கங்கள் தோண்டுவது, மரங்கள் வெட்டப்படுவது என இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. ஆனல் எந்த ஒரு முயற்சியும் இதுவரை மேற்கொண்டதில்லை என்பது தான் உண்மை.
இது குறித்து World Wildlife தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த மாரியானா நேபோலிடானா பேசும் போது, “ஏப்ரலில் மிக அதிக எண்ணிக்கையில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் எச்சரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபர் போல்சோனரோ கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு எதிராக பிரேசில் பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்திவந்தனர். ஆனால் போராட்டம் நடத்திய பழங்குடியின மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
சுமார் 40,000 தாவர இனங்கள், 1,300 பறவை இனங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரனங்கள் வாழும் மையமாக அமேசான் திகழ்கிறது. ஏற்கனவே காட்டுத்தீ ஏற்பட்டு உயிரினங்கள் மற்றும் இயற்கை வளம் பாதிக்கப்பட்ட நிலையில், மனிதர்களும் சேர்ந்து காடுகளை அழிப்பது என்பது வெறும் ஒரு வனத்தின் அழிவு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பூமிக்கே மிகப்பெரிய குந்தகம் விளைவிக்கும் செயல் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிரிக்கின்றனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!