உலகம்
மெக்சிகோ மீது வெடிகுண்டு வீச டிரம்ப் திட்டம்?.. பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.நா. கவலை!
பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - ஐ.நா. தகவல்!
கடந்த ஆண்டு, உணவின்றி வாடியோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘உள்நாட்டு போர், தட்பவெப்ப மாற்றம், கொரோனா பரவல் ஆகியவை, லட்சக்கணக்கானோரை போதிய உணவு கிடைக்காத நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த, 2016ல் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர், 11 சதவீதமாக இருந்தனர். இது, 2021ல், 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், உணவற்றவர்களுக்கு அளிக்கும் நிதியுதவி குறைந்துள்ளது. இத்தகைய உதவி, 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ல், 25 சதவீதம் குறைந்து, 60 ஆயிரத்து, 750 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறு வரையறையை நிராகரிக்கிறோம்!
ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறு வரையறையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அதிகாரத்தை நீக்கும் நோக்கத்தோடு தொகுதி மறு வரையறை குழு செயல்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யபட்டிருப்பதாகவும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நிராகரிப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
போரை முடிவுக்கு வர வேண்டும்- ஐ.நா!
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும். உக்ரைன், ரஷியா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்.என்று கூறியுள்ளார். சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ மீது வெடிகுண்டு வீச திட்டமிட்ட டிரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் மார்க் எஸ்பர். இவர் தற்போது எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மெக்சிகோவில் உள்ள சட்டவிரோத போதைப்பொருள் மருந்து ஆய்வகங்களில் வெடிகுண்டு வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் தன்னிடம் இரண்டு முறை ஆலோசித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் " 2020 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் மருந்து ஆய்வகங்களை அழிக்க இராணுவம் ஏவுகணைகளை ஏவ முடியுமா" என்று டிரம்ப் இரண்டு முறை தன்னிடம் கேட்டதாக கூறியுள்ளார். வெடிகுண்டுகளை வீசிவிட்டு பின்னர் அதற்கு நாம் பொறுப்பல்ல என்று கூறிவிடலாம் என டிரம்ப் கூறியதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!
பிலிப்பைன்சில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நேற்று மதியம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!