உலகம்

பெல்ஜியம் சாக்லெட்டால் பரவும் நோய் தொற்று.. குடும்ப செலவுக்கு வரிப்பணத்தை செலவழித்த பிரதமர் ! #5IN1_WORLD

1). இலங்கையில் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்கு கோல்டன் வீசா!

இலங்கையில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்வோர் கோல்டன் விசா திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை இலங்கையில் தங்கி தொழில் செய்யலாம் என்ற அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அடுக்குமாடி கட்டடங்கள் வாங்கும் நபர்களுக்கு ஐந்து ஆண்டு விசா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இலங்கை நாட்டின் முதலீடுக்கு உதவும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2). சாக்லெட்டால் பரவும் நோய் தொற்று: ஐரோப்பாவில் 150 குழந்தைகள் பாதிப்பு!

ஐரோப்பாவில், பெல்ஜியம் சாக்லெட் சாப்பிட்ட 151 குழந்தைகள், 'சால்மோனெல்லா' என்ற நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்பது குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லெட்கள் உலக அளவில் பிரசித்தம் பெற்றவை. இந்தியா உட்பட, 113 நாடுகளுக்கு இந்த சாக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக 11 நாடுகளில் இந்தத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3). ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷியாவிற்கு பதில் இடம் பெற போகும் நாடு எது?

செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.பொதுச் சபை செய்தித் தொடர்பாளர் பாலினா குபியாக், ரஷியா இடைநீக்கம் செய்யப்பட்டதால் 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் காலியாக உள்ள இடத்திற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒரு நாட்டிற்கு இடம் அளிக்க மே 11ந் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக கூறினார். தற்போதுவரை செக் குடியரசு மட்டுமே வேட்பாளர் களத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

4). குடும்ப சாப்பாட்டு செலவுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவழித்த பிரதமர்!

ஸ்ரேல் நாட்டில் நப்தாலி பென்னட் பிரதமராக உள்ளார். இவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதாக டி.வி. சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடுமையான விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.

பிரதமர் நப்தாலி பென்னட் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும், தனது வீட்டுக்காக 26 ஆயிரத்து 400 அமெரிக்க டாலர் செலவிடுவதாகவும், அதில் சாப்பாட்டுக்கு 7,400 அமெரிக்க டாலர் செலவு செய்வதாகவும் ஒப்புக்கொண்டார். இனி தன் சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்வேன் என கூறி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

5). ரூ.2 லட்சம் கோடி சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு எழுதிய தம்பதி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பணக்காரர் ஆண்ட்ரூ ட்விக்கி பாரெஸ்ட், அவரது மனைவி நிக்கோலா. அந்நாட்டின் 2வது பணக்கார குடும்பம் ஆகும். இந்த நிலையில் ஆண்ட்ரூ ட்விக்கி-நிக்கோலா தம்பதி, சொத்துக்களுக்கு தங்களது பிள்ளைகள் வாரிசாக இருக்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர். அவர்களின் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். அவர்களது சொத்து உள்நாட்டு ஆதரவு, கல்வி மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பூமியை தாக்க வரும் சிறுகோள்களை அழிக்க சீனா திட்டம்.. மீண்டும் தட்டம்மை நோய் - 132 பேர்பலி ! #5IN1_WORLD