உலகம்
அசாஞ்சேவை நாடு கடத்த உத்தரவு... முக்கிய முடிவை எடுக்கவுள்ள இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சர்! #5in1_World
1) அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவு!
அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட அசாஞ்சேவை, நாடு கடத்த இங்கிலாந்து கோர்ட் உத்தரவிட்டது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை, வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பும் முடிவை இங்கிலாந்து அரசு எடுக்கலாம் என வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாமா, வேண்டாமா என்ற முடிவை இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல் எடுக்கவுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் ஜூலியன் அசாஞ்சே உள்துறை அமைச்சரிடமும், உயர் நீதிமன்றத்திலும் அப்பீல் செய்ய முடியும். இதற்கான நடவடிக்கையில் அவரது வக்கீல்கள் இறங்கியுள்ளனர்.
2) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷ்யா
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். இது குறித்து பேசிய அதிபர் புதின், உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும் இது ரஷிய ஆயுதப் படைகளின் போர் திறனை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷியாவின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையும் புதிய ஏவுகணை உறுதி செய்துள்ளது என்றும், ரஷியாவை தாக்க நினைக்கும் எதிரிகள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
3) 20 மணி நேரம் ஃபிரிட்ஜ்ஜிற்குள் இருந்து உயிர் தப்பிய சிறுவன்
பிலிப்பைன்ஸில் மெகி புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அப்போது பேபே நகரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் வசித்து வந்த சிஜே ஜஸ்மே என்ற 11 வயது சிறுவன் நிலச்சரிவு ஏற்பட்டபோது குளிர்சாதன பெட்டிக்குள் ஒளிந்துகொண்டான்.
பின்னர் நிலச்சரிவு பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்றபோது, அங்கே குளிர்ச்சாத பெட்டி ஒன்று கிடப்பதை வீரர்கள் கண்டறிந்தனர். அதை திறந்து பார்த்தபோது சிறுவன் பத்திரமாக இருந்துள்ளான். சுமார் 20 மனி நேரம் சிறுவன் குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
4) கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான்!
பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று முதல் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்தார். இதுபற்றி அவர் பேசுகையில், “நீங்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக போராடுவதால், நான் இதை ஒரு போர் மந்திரி சபையாக கருதுகிறேன். நாடு எனும் படகு கடனில் மூழ்கி கொண்டிருக்கிறது.
அந்தப் படகை நாம் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும்.” என கூறினார். மேலும் அவர் தற்போதைக்கு அரசியல் அல்ல, வளர்ச்சியே நமது முன்னரிமை என மந்திரி சபையை வலியுறுத்தினார்.
5) ஆப்கனில் திரும்பும் தலிபான் ஸ்டைல் தண்டனைகள்
மது அருந்தியதாகவும், மது விற்றதாகவும் கைதான 7 பேருக்கு தலிபான்கள் கசையடி தண்டனை கொடுத்துள்ளனர். முன்னதாக தலிபான்கள் 1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்தபோதும் இதுபோன்ற கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. ஆண் துணை இல்லாமல் வெளியே வரும் பெண்கள் தாக்கப்பட்டனர். உச்சபட்சமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஆண் துணை இல்லாமல் வெளியே வந்ததற்காக கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தலிபான் ஸ்டைல் தண்டனைகள் ஆப்கனில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைகளை துண்டிப்பது, திருடினால் பாதங்களை வெட்டுவது, பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அவர்களை கல்வீசி கொல்வது போன்ற கொடூரமான தண்டனைகள் தலிபான் பட்டியலில் உள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!