உலகம்

வானில் இருந்து தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- இடிந்து விழுந்த வீடுகள்!

1) பின்லாந்தில் விமானம் விழுந்து நொறுங்கியது!

பின்லாந்தில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்லாந்து நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிவாஸ்கிலா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார். கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதை தொடர்ந்து விமானம் விமான நிலையத்துக்கு அருகிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2) ஏமன் முன்னாள் அதிபருக்கு வீட்டு சிறை!

கடந்த 7-ஆம் தேதி ஏமன் நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், சவுதி அரேபியா அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மன்சூர் ஹாதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. சவுதி அரேபியா அதிகாரிகள் மன்சூர் ஹாதியின் ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை வெளியிடுவதாக மிரட்டி அவரை பதவி விலக வைத்ததாகவும், ராஜினாமாவை அறிவித்தது முதல் மன்சூர் ஹாதி ரியாத்தில் உள்ள அவரது வீட்டில் சிறைவைக்கப்பட்டிருப்பதாகவும், யாருடனும் தொடர்புகொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3) மக்களிடம் நிதி திரட்டும் உக்ரைன்!

ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து வலுவாக போரிடுவதற்கு போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ள உக்ரைன் அரசு, இதற்காக ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. “தயவுசெய்து எனக்கு ஒரு போர் விமானம் வாங்கிக் கொடுங்கள்” என்று பிரசார இணையதளத்தில் தலைப்பிடப்பட்டுள்ளது. இணையதள முகப்புப் பக்கத்தில், உக்ரைன் விமானி ஒருவர் போர் விமானங்கள் உட்பட அழிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களை நோக்கி நடந்து சென்று, பின்னர் கேமராவைப் பார்த்து, ‘எனக்கு ஒரு போர் விமானம் வாங்கிக் கொடுங்கள்’ என்று கூறும் வீடியோவும் இடம்பெற்றுள்ளது. ரஷியாவின் தாக்குதலால் அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நகரங்களின் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

4) இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து வடக்கு வடகிழக்கே 779 கிலோமீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இன்று காலை 6.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக பதிவானது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசிய நகரங்களில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதேவேளையில் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5) போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சுட்டு கொலை!

பாகிஸ்தானில் போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் 2 பேரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கான் மாவட்டத்தில் தராபன் காலன் பைபாஸ் சாலையில் வாகனம் ஒன்றில் கலால் மற்றும் போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், துப்பாக்கிகளுடன் திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் வாகனத்தில் இருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோனர். இந்த தாக்குதலில் கலால் மற்றும் போதை பொருள் ஒழிப்பு துறையை சேர்ந்த 2 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

Also Read: “Birthday கொண்டாடுனது ஒரு குத்தமாய்யா..?” - ஊழியருக்கு 3.4 கோடி இழப்பீடு வழங்கிய நிறுவனம் : காரணம் என்ன?