உலகம்
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை.. ரெயில் நிலையத்துக்கு சென்றபோது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு!
1) ஹஃபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டுகள் தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்!
மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதியாளரான ஹஃபீஸ் சயீத்திற்கு, பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும், அந்தத் தீர்ப்பில் பாகிஸ்தான் ரூபாயில் 3,40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்ததாக கைதான ஹஃபீஸ் சயீத், 2020-ஆம் ஆண்டில் இருந்து லாஹூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கிறார். பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லக்ஷர் ஈ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஆவார்.
2) கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
கனடா நாட்டின் டொராண்டோவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (21) என்ற மாணவர் கனடாவில் தங்கிப் படித்து வந்தார். டொராண்டோவில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கார்த்திக் வாசுதேவ் சென்றபோது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கார்த்திக் வாசுதேவ் உடலில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்தார்.
3) கொலம்பியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு!
கொலம்பியாவில் கனமழையால் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 11 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்து உள்ளனர். கொலம்பியாவின் ஆன்டியோகியா பகுதிக்கு உட்பட்ட அப்ரியாக்கி நகராட்சி பகுதியில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற முறையில் செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் நிலச்சரிவின் பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.
4) ஆஸ்கார் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை
ஆஸ்கார் விருது விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது. சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் உலக அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. ஆஸ்கார் கமிட்டி இதுகுறித்து விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.
5) ‘கிரீன் கார்டு' கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது அமெரிக்கா!
கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற குழு நிறைவேற்றியுள்ளது. குடும்பம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்குரிய கிரீன் கார்டு வரம்பை அதிகரிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
குறிப்பாக குடும்பம் சார்ந்த குடியேற்றங்களுக்கான விசாக்களுக்கு ஒதுக்கப்படும் கிரீன் கார்டு வரம்பை 7-ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க இந்த மசோதா அங்கீகரிக்கிறது. இந்த மசோதா சட்டமாக மாறினால் அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியர்கள், சீனர்கள் அதிகளவில் பலன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!