உலகம்
ரஷ்ய அதிபர் புதினின் மகள்களைக் குறிவைத்த அமெரிக்கா.. இந்தியாவிற்கு ஆதரவளிக்க திட்டம்? | #5in1_World
1) ரஷ்யாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தியது இன்டெல் நிறுவனம்!
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷ்யாவில் அனைத்துப் புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என இன்டெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. நாங்கள் ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டோம். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிப்பதிலும், அமைதிக்கு விரைவாக திரும்ப அழைப்பு விடுப்பதிலும் இன்டெல் தொடர்ந்து உலகளாவிய சமூகத்துடன் இணைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
2) ரஷ்ய அதிபர் புதினின் மகள்களைக் குறிவைத்து தடைகளை அறிவிக்கத் தொடங்கியது அமெரிக்கா
ரஷ்ய அதிபர் புதினின் மகள்களைக் குறிவைத்து தடைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. புதினின் மகளான கத்ரீனா, ரஷ்ய அரசின் பாதுகாப்பு தொழிற்சாலையில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார். அவரது மற்றொரு மகள் மரியா, மரபணு சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது ஆராய்ச்சிப் பணிகளுக்கு அரசு பில்லியன் கணக்கில் பணத்தைக் கொடுத்து வருவதாகத் தெரிகிறது. இருவருக்கும் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் சொத்துகள், முதலீடுகள் உள்ளன. அவற்றை முடக்கப்போவதாக அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
3) பதவியேற்ற ஓராண்டுக்குள் இஸ்ரேல் அரசு பெரும்பான்மையை இழந்தது!
பதவியேற்ற ஓராண்டுக்குள் இஸ்ரேல் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், நப்தாலி பென்னட் 8 சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். இந்நிலையில் நப்தாலி பென்னட் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஒருவர் தனது ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதன்மூலம் ஆட்சி கவிழ்ந்தால் 3 ஆண்டுகளில் 5-வது முறையாக இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
4) எரிசக்தி இறக்குமதியை பன்முகப்படுத்த இந்தியாவை ஆதரிக்க தயார் - அமெரிக்கா
எரிசக்தி இறக்குமதியை பன்முகப்படுத்த இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தியாளர் செயலாளர் ஜென் சாகி "இந்தியா ரஷியாவிடமிருந்து ஒன்று முதல் இரண்டு சதவிகித எண்ணெய்யை மட்டுமே இறக்குமதி செய்கிறார்கள். இந்தியாவின் இறக்குமதியை பன்முகப்படுத்தவும் நம்பகமான சப்ளையராக பணியாற்றவும் இந்தியாவிற்கு ஆதரவளிக்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறோம்.” என்று கூறியுள்ளார்.
5) ருமேனியாவில் ரஷ்ய தூதரகம் மீது கார் மோதல்
ருமேனியாவில் ரஷ்ய தூதரகம் மீது மர்ம நபர் ஒருவர் காரை மோதி வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் யார், இது விபத்தா அல்லது திட்டமிட்ட சம்பவமா என்பன தொடர்பான விசாரணைகள் தொடங்கியுள்ளன. சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு ரஷ்யா போரை நிறுத்தாததைக் கண்டித்து சில நாடுகள் தங்கள் தேசத்தில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளை திருப்பியனுப்பி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேறச் சொல்லி அண்மையில் ருமேனியா அரசும் உத்தரவிட்டது. இந்தச் சூழலில்தான் ருமேனியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது இத்தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!