உலகம்

இலங்கை போல இன்னொரு நாட்டிலும் கடும் விலைவாசி உயர்வால் சிக்கல்... அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்!

1) சோமாலியாவில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி

சோமாலியா ராணுவத்தால் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-சபாப் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலி தேசிய ராணுவம் தீவிர வேட்டையில் உள்ளது. மத்திய சோமாலியாவின் முதுக் பிராந்தியத்துக்கு உட்பட்ட கோப்யோவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தின் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது அங்கே பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த மோதலில் 7 பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து AK 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2) நிதி அமைச்சராக பதவியேற்று 24 மணி நேரத்தில் பதவி விலகிய இலங்கை அமைச்சர்

இலங்கையில் நிதி அமைச்சராக பதவியேற்று அலி சப்ரி 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார். அதிபர் ராஜபக்சே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிய காபந்து அமைச்சரவை உடனடியாக அமைக்கப்பட்டது. புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இலங்கையின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்திற்குள் பதவி விலகியுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், நிதித்துறை செயலாளரும் ராஜிநாமா கடிதத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3) விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம்: பெரு நாட்டில் ஊரடங்கு அமல்

பெரு நாட்டில் ஊரடங்கு அமல்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். பெரு நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக உணவு பெருட்களின் விலையும், விவசாய உரங்களின் விலையும் உயர்ந்ததால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 2 வாரங்களாக ஆங்காங்கே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் சுங்கச்சாவடிகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

4) டைம்ஸ் சதுக்கத்தில் முதன்முறையாக இறைவணக்கம் செலுத்திய முஸ்லிம்கள்

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் முதன்முறையாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தராவீ இறைவணக்கம் செலுத்தியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டனில் மையபகுதியாக டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ளது. மிக பெரிய வர்த்தக பகுதியாகவும், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் புனித ரம்ஜான் மாதத்தில் மேற்கொள்ளும் தங்களுடைய விரதத்தினை முடித்து கொண்டு டைம்ஸ் சதுக்கத்தில் தராவீ இறைவணக்கம் செலுத்தியுள்ளனர்.

5) இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வருகை!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இரு நாட்டு பிரதமர்களிடையே ஓர் தனிப்பட்ட சந்திப்பு குறித்து தொலைபேசியில் விவாதிக்கப்பட்டது. அப்போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரும் 22ஆம் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்.. படகு கவிழ்ந்து 90 பேர் பலி! #5IN1_WORLD