உலகம்

உயிர் வாழவே போராடும் நிலை.. அதிபர் வீட்டை முற்றுகையிட்ட இலங்கை மக்கள் - தடியடி நடத்தியதால் மூண்ட கலவரம் !

இலங்கையின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பெரிய வருவாய் என்றால் அது சுற்றுலாத்துறைதான். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதனால், அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செல்வதில் அந்நாட்டிற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை ரூ.5,000, சர்க்கரையின் விலை ரூ.230, வெங்காயத்தின் விலை ரூ.450, பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.1000, என தினந்தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் அரிசி ஒரு கிலோ ரூ.448க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.263க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு முட்டை ரூ.28க்கும் ஒரு ஆப்பிள் ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடைகளில் ஒரு கிளாஸ் டீ ரூ.100க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையின் முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு, பல்வேறு பகுதிகளில் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு அருகே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடிய மக்களை போலிஸார் கலைக்க முயற்சித்தபோது, போராட்டக்காரர்களுக்கும் போலிஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், போலிஸார் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து கண்ணீர்புகைக் குண்டு வீச்சியும், தண்ணீர் பீரங்கிகளை கொண்டும் போலிஸார் போராட்டத்தைக் கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Also Read: ஒரு வடை ரூ.120.. ஒருவேளை உணவுக்கே திண்டாடும் இலங்கை மக்கள்.. என்ன செய்ய காத்திருக்கிறார் கோட்டாபய?