உலகம்

#5in1_World : “Facebook, Twitter-க்கு போட்டியாக சமூக வலைதளமா?” - எலான் மஸ்க்கின் திட்டம் என்ன?

1) ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மேலும் ஒரு தடை!

ஆப்கானிஸ்தானில் ஆண்களும் பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காவிற்குச் செல்வதை தாலிபான்கள் தடை செய்துள்ளனர். அண்மையில் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகள் கல்வி கற்க தடை விதித்த தாலிபான்கள் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளிகளை மூடி மாணவிகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பினர். ஆண்கள் துணையில்லாமல் வந்ததால் பெண்களை விமானங்களில் ஏற விடாமல் திருப்பி அனுப்பி அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், ஆண்களும் பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல தடை விதித்து அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஆப்கனிஸ்தானில் ஆண் பெண் பிரிவினைவாதம் வேரூன்றி வருவது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

2) ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டு சதி : இம்ரான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கு வெளிநாட்டு சதி நடப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார். அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், இம்ரான் கான் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மந்திரிகள் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாமல் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆதரவாளர்கள் பேரணியில் உரையாற்றிய இம்ரான் வெளிநாட்டு சதி நடப்பதாகவும் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

3) நாசாவின் இரண்டாவது எஸ்எல்எஸ் மூன் ராக்கெட் ரெடி!

நியூ ஆர்லியன்ஸில் நாசாவின் இரண்டாவது SLS moon ராக்கெட் வடிவம் பெற்று வருகிறது. முதல் விண்வெளி ஏவுதள அமைப்பு ராக்கெட் அதன் முதல் விமானத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், இரண்டாவது SLS-க்கான பாகங்களை ஒருங்கு கூடுதலின் முக்கிய கட்டம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆர்ட்டெமிஸ் 2 பணிக்கு இது பயன்படுத்தப்படும், இது கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக சந்திரனைசுற்றி நான்கு வின்வெளி வீரர்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4) டெலிவரி வார்டில் நடந்த சுவாரஸ்யம்!

ஃபுளோரிடாவில் உள்ள மகப்பேறு மற்றும் பிரசவ மருத்துவமனையின் முற்றத்தில் ஒரு தாய் வாத்து 10 வாத்து குஞ்சுகளைப் பொரித்துள்ளது. குழந்தைகளின் அழுகை சத்தங்களுக்கு இடையே வாத்து குஞ்சுகளின் சத்தம் அங்கு இருக்கும் எல்லோரது கவனத்தையும் பெற்று வருகிறது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தாய் வாத்தையும் 10 வாத்துக் குஞ்சுகளையும் பத்திரமாக பில்டிங் வழியாக வெளியேற்றினர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

5) புதிய சமூகவலைதளம் தொடங்குகிறாரா எலான் மஸ்க்?

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் புதிய சமூகவலைதளத்தை தொடங்கவிருக்கிறாரோ என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது அவர் பதிவு செய்த ட்வீட். ட்விட்டரில் ஒருவர், "நீங்கள் புதிதாக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்குவீர்களா? அதன் மூலம் கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? பிரச்சார நெடியில்லாத வலைதளமாக அது இருக்குமா? " என்று கேட்டிருந்தார்.

அந்த இளைஞரின் ட்வீட்டுக்குப் பதிலளித்த எலான் மஸ்க், இதுகுறித்து நான் தீவிரமாக பரிசீலித்து வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்ததனால் அவர் புதிய சமூகவலைதளம் தொடங்குகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Also Read: “சிங்கிள் ஃபைட்டுக்கு வர்றியா..?” - ரஷ்ய அதிபரை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்!