உலகம்

“டபுள் ஏஜென்ட்?” : உக்ரைன் அதிகாரி படுகொலை விவகாரத்தில் மர்மம்... பின்னணியில் யார்? - பரபரப்பு தகவல்கள்!

உக்ரைன் - ரஷியா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரி படுகொலை செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் போர் தொடுத்து வருகிறது. உக்ரேனும் ரஷ்ய படையினர் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளை ரஷ்ய படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இரு நாடுகளுக்கிடையேயான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

கடந்த மாதம் 28ஆம் தேதி பெலாரஸில் நடந்த ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட 45 வயதான உளவுத்துறை அதிகாரி டெனிஸ் கிரீவ், கீவ் நகரில் உள்ள பேச்செர்ஸ்க் கோர்ட்டுக்கு அருகே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இவர், ரஷ்யாவுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் உக்ரைன் அரசால் கொல்லப்பட்டதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சி ஹொன்சரெங்கோ, "உக்ரைனின் பாதுகாப்பு சேவையால் கைது செய்யப்பட்ட உக்ரேனிய பேச்சுவார்த்தை பிரதிநிதி டெனிஸ் கிரீவ் தேசத்துரோக குற்றச்சாட்டு காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் " எனத் தெரிவித்தார்.

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையும் கிரீவ் ஒரு உளவாளி என்றும், அவர் கொல்லப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது.

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "சிறப்பு பணிகளை நிறைவேற்றும்போது மூன்று உளவாளிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் உள்நாட்டு விவகார அமைச்சகத்தின் முக்கிய புலனாய்வு இயக்குநரகத்தின் ஊழியர்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உக்ரைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி தேவை” : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!