உலகம்

உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வருவது ஏன்? - தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பைடன்!

என்ன நடக்கிறது உக்ரைனில்?

உக்ரைன் மீது தொடுத்திருக்கும் போரை பெரும்பாலான ஊடகங்கள் ஒற்றைத்தன்மையுடன் அணுகியிருக்கின்றன. ‘ஏன் போர்’ என்ற கேள்விக்குக் கூட அவை செல்லாமல் நேரடியாக ‘போரைத் தொடுத்ததால் ரஷ்யாதான் குற்றவாளி’ எனப் பேசி வருகின்றன.

போரை எவர் தொடுத்தாலும் தவறுதான். சந்தேகம் இல்லை. ஆனால் போர் தொடுக்கத் தூண்டுவது தவறா, தவறு இல்லையா?

உக்ரைனின் அண்டை நாடு ரஷ்யா. உக்ரைனுக்கு மறுபக்கத்தில் இருக்கும் போலந்து உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்க சார்பு நாடுகள். வரலாற்றில் ஏற்கனவே சோவியத் யூனியனாக ரஷ்யா இருந்த சமயத்தில் அமெரிக்கா பல இடையூறுகளை செய்திருக்கிறது.

இன்று செய்திகளில் அடிபடும் NATO எனப்படும் North Atlantic Treaty Organization என்கிற அமைப்பு, அடிப்படையில் பல நாட்டு ராணுவங்களின் கூட்டமைப்பு ஆகும். 1949ஆம் ஆண்டில் கையெழுத்தான வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து முதலிய முதல் உலக நாடுகள் இருந்தன. ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமே ஒருவேளை சோவியத் யூனியன் போர் தொடுத்தால் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும் என்பதுதான். அதாவது NATO அமைப்பின் உருவாக்கமே இன்று ரஷ்யாவாக இருக்கும் முந்தைய சோவியத் யூனியனை எதிர்க்கத்தான்.

பிறகு சோவியத் யூனியன் உடைந்துபோனது. ஆனால் NATO அமைப்பு கலைக்கப்படவில்லை. 28 ஐரோப்பிய நாடுகளும் 2 வட அமெரிக்க நாடுகளும் NATO-வில் உறுப்பினர்களாக இருக்கின்றன. அவற்றில் ருமேனியா, போலந்து, ஸ்லொவாக்கியாவும் அடக்கம். மூன்றுமே உக்ரைனின் ரஷ்ய எல்லைக்கு மறுபக்கம் இருப்பவை. அதாவது ரஷ்யாவுக்கு அருகே இருக்கும் உக்ரைனின் மறு எல்லையில் இருக்கும் நாடுகள் அமெரிக்க சார்பு ராணுவக் கூட்டமைப்பில் இருக்கின்றன.

உக்ரைனும் அமெரிக்காவின் ராணுவக் கூட்டமைப்பில் இணைந்துவிட்டால், ரஷ்யாவின் வாசலுக்கே அமெரிக்கப் படைகள் வந்துவிடும். பிறகு ரஷ்யாவின் வணிகப்பாதை உள்ளிட்ட எல்லா போக்குவரத்துகளும் தடைபடும். ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க மட்டுமே உக்ரைனை அமெரிக்கா இயக்குகிறது. அதற்கு சாட்சியாக தற்போதைய போர் தொடங்குவதற்கு முன் நடந்த சம்பவங்கள் இருக்கின்றன.

ஜனவரி 2021

உக்ரைனின் அதிபரான செலன்ஸ்கி NATO-வில் உக்ரைன் சேருவதற்கான விருப்பத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தெரிவிக்கிறார்.

மார்ச் 2021

ரஷ்யப் படைகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்படுகின்றன. விமர்சனம் எழுந்தவுடன் படையின் ஒரு பகுதி திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அக்டோபர் 2021

துருக்கி நாட்டின் TB2 ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி ரஷியப் படைக்கலன் மீது தாக்குதல் நடத்தியது உக்ரைன்.

நவம்பர் 2021

மீண்டும் எல்லையில் படைகளைக் குவித்தது ரஷ்யா.

டிசம்பர் 7, 2021

அமெரிக்க அதிபர் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என மிரட்டுகிறார்.

டிசம்பர் 17, 2021

ரஷ்யா தன் கோரிக்கைகளை அறிவிக்கிறது. உக்ரைன் NATO-வில் சேர்க்கப்படக் கூடாது என்பதும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்பதும்தான் பிரதானக் கோரிக்கைகள்.

ஜனவரி 3, 2022

போர் வந்தால் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கிறது.

ஜனவரி 10, 2022

ஜெனிவாவில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. தீர்வு எட்டப்படவில்லை. ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என அமெரிக்கா கூறுகிறது.

ஜனவரி 24, 2022

கிழக்கு ஐரோப்பாவில் NATO படைகளை குவிக்கிறது. ராணுவத் தளவாடங்களை நிரப்புகிறது.

ஜனவரி 26, 2022

ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு எழுத்து மூலம் பதிலளிக்கிறது அமெரிக்கா. உக்ரைனுக்கு NATO அளிக்கும் ஆதரவை பதில் உறுதிபடுத்துகிறது.

ஜனவரி 28, 2022

ரஷ்யாவின் பிரதானக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக் கூறிய புதின் எனினும் தொடர்ந்து ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்.

ஜனவரி 31, 2022

ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே விவாதம் நடக்கிறது. ரஷ்யாவின் தாக்குதல் உலகப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்றது அமெரிக்கா. படையெடுக்க மாட்டோமென தொடர்ந்து ரஷ்யா மறுத்தும் அது போர் தொடுக்கப் போவதாக அமெரிக்கா தொடர்ந்து விஷமப் பிரசாரம் செய்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. போரை அமெரிக்கா விரும்புவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியது.

பிப்ரவரி 1, 2022

ரஷ்யாவின் கோரிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து நிராகரிப்பதாக தெரிவித்தார் புதின்.

பிப்ரவரி 10, 2022

இங்கிலாந்தின் அயலக அதிகாரியும் ரஷ்ய அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்ய அதிகாரி அப்பேச்சுவார்த்தையை ‘கேட்கும் திறன் அற்றவருக்கும் பேச முடியாதவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை’ என வர்ணித்தார். இங்கிலாந்தின் அதிகாரி, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என மிரட்டி, எல்லையில் அந்த நாடு படைகளை குவிப்பதைக் கண்டு யாரும் பயப்பட வில்லை எனவும் வீம்பு பேசினார்.

பிப்ரவரி 12, 2022

ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் பைடனும் காணொளி வழியாகப் பேசினர். மீண்டும் ரஷ்யாவின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

இத்தகைய நிகழ்வுகளின் காலவரிசையில்தான் தற்போது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது.

கேள்வி அடிப்படையில் ஒன்றுதான்.

ரஷ்யாவும் உக்ரைனும் அண்டை நாடுகள். அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே பிணக்கு ஏற்படுகிறது. அந்தப் பிணக்கைத் தீர்க்கும் பேச்சு வார்த்தைக்கு ஏன் அமெரிக்கா வருகிறது?

உக்ரைன் மீதான தற்போதைய போரைத் தொடுத்தது ரஷ்யாவாக இருக்கலாம். ஆனால் தூண்டிவிட்டது அமெரிக்காதான்.

குற்றம் செய்தவனை விட, குற்றம் செய்யத் தூண்டி விட்டவனுக்குதானே அதிக தண்டனை இருக்கவேண்டும்?

Also Read: உக்ரைன்-ரஷ்யா போர் : பாகிஸ்தான் மாணவர்களை பத்திரமாக மீட்க உதவிய இந்திய தேசியக் கொடி - நெகிழ்ச்சி சம்பவம்!