உலகம்

“உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு ஒன்றிய அரசே காரணம்” : கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தாக்கு!

உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 7-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு மிகப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கார்கிவ் நகருக்குள் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்ததால் அவர்களுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் சண்டையிட்டனர். அப்போது கார்கிவ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள எரிவாயு குழாயை ரஷ்யப்படையினர் குண்டு வைத்து தகர்த்தனர்

கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் பலர் உயிரிழந்தனர். இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவ மாணவனும் உயிரிழந்தார்.

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் தந்தை, தனது மகன் 97% மதிப்பெண் பெற்றிருந்தும் இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் இதே படிப்புக்கு குறைவான செலவில் கற்றுத் தரப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பேசியுள்ள குமாரசாமி, “நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு மறுக்கப்படுகிறது.

தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி விதிக்கப்படுகிறது.

நன்றாகப் படித்த மாணவன் நவீனுக்கு, இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தனது மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார்.

நீட் தேர்வை வைத்து பயிற்சி மையங்கள் லாபம் பார்க்கின்றன. நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பின்னணியில் இருப்பது யார்?பின்னணியில் ஒன்றிய அரசு செயல்படுகிறதா என சந்தேகம் எழுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அவசர உத்தரவு... என்ன நடக்கிறது உக்ரைனில்?