உலகம்

குண்டுமழைக்கு இடையே சைபர் தாக்குதல்.. ரஷ்ய செய்தி ஊடகம் முடக்கம்.. என்ன நடக்கிறது உக்ரைனில்?

உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா நேற்று தனது தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் தலைநகரை முழுமையாக கைப்பற்றும் எண்ணத்துடன் படைகள் முன்னேறி வருகின்றன.

2வது நாளாக தொடரும் இந்த தாக்குதலில் இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். முதல் நாளில் மட்டும் 11 விமானப்படைத் தளங்கள் உட்பட 74 ராணுவ தளங்களை அழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைன் மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் அரசுக்கு தொடர்புடைய இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் லாட்வியா, லிதுவேனியா நாடுகளிலும் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரஷ்யாவின் ஃபெடரல் ஆன்டிமோனோபோலி வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் RT எனப்படும் ரஷ்யாவின் செய்தி ஊடக சேவையும் முடக்கப்பட்டுள்ளது. பின்னர் அரைமணிநேரத்தில் இந்தச் சேவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு நாட்களாக ரஷ்யா, உக்ரைனுக்கு இடையே தாக்குல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு நாடும் சைபர் தாக்குதலை தொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதள தாக்குதல் காரணமாக மறைமுகாக பல நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: “மகளை வழியனுப்பும்போது கதறி அழும் தந்தை..”: நெஞ்சைக் கலங்க வைக்கும் வீடியோ - எப்போது ஓயும் போர் மேகம்?