உலகம்

“அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் எங்களை கைவிட்டு விட்டன” : உக்ரைன் அதிபர் கண்ணீர்!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றும் தங்களுக்கு எந்த நாடும் உதவி செய்ய முன்வரவில்லை என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை நேற்று தொடங்கின. கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ஏவுகணை ரஷ்யா தாக்குதல் நடத்தியது. பல நகரங்களில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

மேலும் தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. எங்கு பார்த்தாலும் குண்டுமழை பொழிவதால், உக்ரைன் மக்கள் உயிர் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது குறித்து உருக்கமாகப் பேசியுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, “ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம். நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்.

இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என எங்கள் தரப்பில் 137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில்தான் இருக்கிறோம். ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள்தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம்.

பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு” என்று உக்ரைன் அதிபர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகளை அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார்.

நேட்டோ குழுமம், ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரித்ததோடு நிறுத்திக் கொண்டுள்ளது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2வது நாளாக தொடரும் தாக்குதல் : “எங்களுக்கு வேற வழி இல்ல” : உலக நாடுகளின் எதிர்ப்பை புறந்தள்ளிய புதின்!