உலகம்

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிக்கு என்ன நடந்தது? - உலகை உலுக்கிய சம்பவம்!

அக்டோபர் 2, 2018.

ஜமால் கஷோகி, சவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர். ஆப்கானிஸ்தானுக்குள் சோவியத் நுழைந்த செய்தி தொடங்கி ஒசாமா பின்லேடன் வளர்ந்தது வரை பல செய்திகளை பல செய்தி நிறுவனங்களுக்கு அவர் வழங்கியிருக்கிறார். பல பத்தாண்டுகளாக அவர் சவுதி அரச குடும்பத்துக்கும் நெருக்கமாக இருந்தார். அரசாங்கத்துக்கும் ஆலோசகராக இருந்தார். ஆனால் நாளடைவில் இரு தரப்புக்கும் பிளவு ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டில் அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு அமெரிக்காவின் வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும் அதன் கொள்கைகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். குறிப்பாக சவுதி அரசரின் மகனான இளவரசர் முகமது பின் சல்மானை பற்றி எழுதினார்.

ஜமால் கஷோகிக்கான பொறி தயார் செய்யப்பட்டது. இஸ்தான்புல் நகரத்தில் இருந்த தூதரகம்தான் அந்த பொறி.

முதன்முதலாக தூதரகத்துக்கு 2018ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி கஷோகி சென்றார். காரணம், மனைவியை விவாகரத்து செய்ததற்கான ஆவணம் பெற வேண்டியிருந்தது. அவர் இரண்டாம் திருமணம் செய்யவிருந்தார். கஷோகி இரண்டாவதாக திருமணம் செய்யவிருந்தவர் ஹடிசே செங்கிஸ். துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்.

ஆனால் அன்று கஷோகி ஆவணத்தை வாங்கவில்லை. அக்டோபர் 2ஆம் தேதி வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லிச் சென்றார்.

அக்டோபர் 2ஆம் தேதியும் வந்தது. திருமணம் செய்யவிருந்த செங்கிஸ்ஸையும் உடன் அழைத்து வந்திருந்தார். பிற்பகல் 1.14 மணிக்கு தூதரகத்துக்குள் அவர் நுழைந்தார்.

அவ்வளவுதான்.

தூதரகத்துக்கு வெளியே செங்கிஸ் 10 மணி நேரங்களாக காத்திருந்தார். கஷோகிக்கு ஏற்பட்டிருந்த நிலையின் யதார்த்தம் அவருக்கு புரியத் தொடங்கியது.

இரண்டு வாரங்கள் கடந்தன. சவுதி அரேபியாவின் தரப்பு கஷோகிக்கு என்ன ஆனது என தங்களுக்கு தெரியாது என சாதித்தது. ‘தூதரகத்தை விட்டு ஒரு மணி நேரத்திலேயே கஷோகி கிளம்பி விட்டார்’ என்றார் இளவரசர் முகமது பின் சல்மான்.

அக்டோபர் 20ஆம் தேதி காட்சிகள் மாறத் தொடங்கின.

சவுதி அரசாங்கம் புதிய கதைக்கு மாறியது. கஷோகியை சவுதிக்கு திரும்பக் கொண்டு போகும் முயற்சியில் ஏற்பட்ட கைகலப்பில் அவர் இறந்துவிட்டதாக கூறியது. முதன்முறையாக கஷோகி மரணமடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டது. குறிப்பாக மூச்சுத் திணறலில் இறந்ததாகவும் சொன்னது.

சவுதி அரேபியாவின் அரசு துணை வழக்கறிஞர் இன்னொரு விதத்தில் சம்பவத்தைக் கூறினார். சவுதி உளவுத்துறையின் தலைவர் அனுப்பிய பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர்தான் கஷோகியை கொல்வதற்கான உத்தரவை கொடுத்ததாக சொன்னார். அதாவது கஷோகியை மீண்டும் சவுதி அரேபியாவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் மிரட்டியோ கேட்கவில்லையென்றால் வன்முறையை பயன்படுத்தியோ கூட அவரை சவுதிக்கு கொண்டு வரும்படி உத்தரவிடப்பட்டிருந்ததாக வழக்கறிஞரின் தரப்பு கூறியது. ஐந்து பேர் கஷோகியை கொன்றதாக ஒப்புக்கொண்டதாக கூறிய அவர், இளவரசருக்கு இதைப் பற்றி எந்த விஷயமும் தெரியாது என்றும் கூறினார்.

கஷோகியின் மரணம் வெளிப்பட்டுவிட்டது. ஆனால் உடல் என்ன ஆனது என்பதைப் பற்றி எந்தவித தகவலும் வரவில்லை. அதைப் பற்றிய கவலை ஏதுமின்றி நடவடிக்கைகள் தொடர்ந்தன.

2019ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தது. 11 பேர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அதில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 3 பேருக்கு தலா 24 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில்தான் உலக நாடுகளில் செல்பேசிகள் ஒட்டு கேட்கப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 50,000 பேரின் செல்பேசிகள் 2017ஆம் ஆண்டிலிருந்து ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் கஷோகியின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அவரது நெருங்கிய உறவுகளின் பெயர்கள் இருந்தன.

கஷோகி திருமணம் செய்யவிருந்த செங்கிஸ்ஸின் செல்பேசியும் விவாகரத்து செய்திருந்த ஹனானின் செல்பேசியும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. பெயர்கள் இருப்பதைக் கண்டதும் இருவரது செல்பேசிகளும் பரிசோதிக்கப்பட்டன. செல்பேசிகளை பெகாசஸ் உளவுமென்பொருள் இயக்கிக் கொண்டிருந்தது. கஷோகியின் கொலையை துப்பறிந்து கொண்டிருந்த இரண்டு துருக்கிய அதிகாரிகளின் பெயர்களும் கூட பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

கஷோகியின் நடமாட்டத்தை தெரிந்துகொள்ள அவரின் கொலைக்கு முன் அவரின் மனைவியின் செல்பேசிக்கும் கொலைக்குப் பின் விசாரணை செல்லும் திசையை தெரிந்துகொள்ள அவரின் காதலியின் செல்பேசிக்கும் பெகாசஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. பல செயலிகளை பயன்படுத்த தனக்கு சொல்லிக் கொடுத்தது கஷோகிதான் எனச் சொல்லும் ஹனான் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார்.

கஷோகி அவருடைய வெளிநாட்டு பத்திரிகையாளர் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசிய போதெல்லாம் ஹனானின் செல்பேசி கஷோகிக்கு அருகேயே இருந்திருக்கிறதாம்.

பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் என சிலருக்கு நேர்ந்திருக்கும் இத்தகைய ஒட்டுக்கேட்டல் மொத்த மக்களுக்கும் நேர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை.

Also Read: “நம்மைப் பற்றி எதிர்கால மக்கள் கொண்டிருந்த கருத்து என்ன தெரியுமா?” : ‘காலப்பயணி’ டிட்டர் சொன்னது என்ன?