உலகம்

1 நிமிடத்தில் தற்கொலை செய்துகொள்ள மெஷின்... சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கிய சுவிட்சர்லாந்து!

ஒருசில நிமிடங்களுக்குள் வலியற்ற, அமைதியான மரணத்தை ஏற்படுத்தும் காப்ஸ்யூல் வடிவ இயந்திரம் சுவிட்சர்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் கருணைக்கொலை சட்டபூர்வமாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக் கொலை அமைப்புகளின் சேவைகள் மூலம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கருணைக்கொலை ஆர்வலரும் மருத்துவருமான பிலிப் நிட்ச்கே, வலியே இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதற்கான இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான சவப்பெட்டி போன்ற இந்த ‘சார்கோ’ (Sarco) எனும் காப்ஸ்யூல் வடிவ இயந்திரத்தினுள் படுத்துக்கொண்டதும் தற்கொலை செய்துகொள்வது குறித்து ஒப்புதல் பெறப்படும்.

பின்னர், தற்கொலைக்கு தயாராகி, பட்டனை அழுத்தினால் காப்ஸ்யூலுக்குள் நைட்ரஜன் நிறைந்து, ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்துவிடும்.

இதனால் உடலில் உள்ள அனைத்து தசைகளும் முற்றிலுமாக செயலிழப்பதால், நகரவோ அல்லது பேசவோ முடியாத நிலை ஏற்படும். அடுத்த சில விநாடிகளில் சுயநினைவை இழந்து கோமாவுக்கு அழைத்துச் செல்லும். அடுத்த சில நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும்.

இந்த இயந்திரத்தை பயன்படுத்தும் நபர் உடலில் உள்ள அனைத்து தசைகளும் முற்றிலும் செயலிழந்த நிலையில் இருந்து பேசமுடியாத சூழலில் இருந்தால் கண் சிமிட்டுவதன் மூலம் கூட இந்த இயந்திரத்தை இயக்க முடியும்.

சார்கோவை இந்த ஆண்டு செயல்படுத்துவதற்கு சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அதன் தயாரிப்பாளர் டாக்டர் பிலிப் நிட்ச்கே கூறியுள்ளார்.

- உதயா

Also Read: 300 ரூபாய்க்காக நடந்த கொடூரம்.. செல்போன் கடைக்காரரை கார் ஏற்றி கொன்ற சகோதரர்கள் : கொலைக்கான பின்னணி என்ன?