உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை... காரணம் என்ன?

மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.

இதையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆங் சான் சூகி போராட்டம் நடத்தினார். அப்போது இவர் உட்படப் பலரை ராணுவம் வீட்டு காவலில் அடைத்தது.

பின்னர், தேர்தலின்போது சட்ட விரோதமாக வாக்கி டாக்கி வாங்கியதாகவும், ரகசிய சட்டத்தை மீறியதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகவும் ஆன் சாங் சூகி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராணுவத்திற்கு எதிராகப் போராடியதற்கு இரண்டு ஆண்டுகளும், இயற்கை பேரிடர் சட்டத்தை மீறியதற்கு இரண்டு ஆண்டுகள் என மொத்தம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மியான்மரில் மக்கள் விடுதலைக்காகப் போராடியதற்காக 21 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை பெற்றவர் ஆங் சான் சூகி. இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளதால் மீண்டும் அவர் பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read: குழந்தைகளைக் குறிவைக்கும் ஒமைக்ரான்... தென்னாப்பிரிக்காவில் அதிகமானோர் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்!