உலகம்

“போராட்டத்தின் குறியீடாகப் பார்க்கப்பட்ட கறுப்பு நாய்” - உங்களுக்கு ‘மடபகோஸ்’ பற்றி தெரியுமா?

2019 ஆண்டு நவம்பர் மாதம்.. சிலி நாடு பெரும் போராட்டங்களில் கொந்தளித்து கொண்டிருந்தது. அக்டோபர் மாதத்தில் வேலை நேர மெட்ரோ ரயில் கட்டணத்தை 30 பெசோக்கள் ஏற்றியது அரசு. Peak Hour என சொல்லப்படும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் நேரத்தில் மெட்ரோ ரயிலில் செல்பவர்கள் 30 பெசோக்கள் அதிகம் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் வெகுண்டெழுந்தனர். போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சிலியில் நடந்த எல்லா போராட்டங்களின் துவக்கமும் மாணவர்களால் தொடங்கப்பட்டவையே. எல்லா போராட்டங்களையும் போல் போக்குவரத்து கட்டண உயர்வுப் போராட்டம் அந்த பிரச்சினையோடு நின்றுவிடவில்லை. அதை பேசத் தொடங்கி பிறகு நாட்டின் பல பிரச்சினைகளைப் பேசி இறுதியாக உலகம் முழுக்க எழுப்பப்படும் கேள்விக்கு வந்து நின்றது.

பணக்காரன் ஏன் பணக்காரனாகிக் கொண்டே இருக்கிறான்? ஏழை ஏன் ஏழையாகிக் கொண்டே இருக்கிறான்?

ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்ட வரலாறு சிலி நாட்டுக்கு இருந்தமையால் முழு வீச்சில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது ஓர் ஆச்சரியகரமான விஷயம்!

ஒரு கறுப்பு நாயின் படம் போராட்டக் கூட்டங்களில் தோன்றியது. சிவப்புத் துணி அணிந்தபடி இருக்கும் கறுப்பு நாயின் படம் அது. அதிகாரத்துக்கு எதிரான குறியீடாக போராட்டத் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டது.

நாய்கள் எல்லா இடங்களிலும் தென்படுபவைதானே.. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது எனக் கேட்கலாம். ஆனால் இங்கு நாயின் உருவம் பதாகைகளாகவும் சுவரொட்டிகளாகவும் மக்களால் ஏந்தப்பட்டன.

ஒரு போராட்டமே கொண்டாடும் அளவுக்கு அந்த நாய் என்ன செய்தது?

கறுப்பு நாயின் பெயர் மடபகோஸ். 2011ம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களில் தென்பட்ட நாய் அது.

2011ம் ஆண்டில் சிலி நாட்டில் நடந்த போராட்டங்களை முன்னெடுத்ததும் மாணவர்கள்தாம். கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வரக் கோரினார்கள். கல்வித்துறை தனியாரிடம் சென்றுவிட்டால் தரமான கல்வித் தகுதி உள்ளோருக்கு வழங்கப்படும் என்கிற வசனம் அங்கும் பேசப்பட்டது. ஆரம்பத்தில் அம்மக்கள் நம்பவும் செய்தனர். ஆனால் மாணவர்களுக்கு இருந்த பொருளாதார சிக்கல்களினால் தனியார் கேட்ட கட்டணம் கட்டுப்படியாகவில்லை.

தனியார் லாபத்துக்கு கல்வியை காவு கொடுக்கக் கூடாது என மாணவர்கள் திரண்டனர். தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பதில் புதிய அரசு பல்கலைக்கழகங்கள் கட்டப்பட வேண்டுமென மாணவர்கள் போராடினர். இலவசக் கல்வியை வழங்கவும் நிர்ப்பந்தித்தனர்.

அந்தப் போராட்டத்தில்தான் முதன் முதலாக கறுப்பு நாய் தென்படத் தொடங்கியது. பிற நாய்களிடம் காணப்படும் நன்றி, அன்பு முதலியவற்றைக் காட்டிலும் மடபகோஸ் என்னும் அந்த கறுப்பு நாயிடம் போர்க்குணமே அதிகம் இருந்தது.

எவரும் தமக்கென சொந்தமாக வாங்கி வளர்த்த நாயல்ல மடபகோஸ். அது ஒரு தெரு நாய். தெரு நாய் என்பதால்தானோ என்னவோ காவல்துறையின் ஒடுக்குமுறையைக் கண்டு அதிகம் எதிர்த்தது.

மடபகோஸ் பெரும்பாலும் தன் வாழ்க்கையை தெருக்களில்தான் கழித்தது. 2009ஆம் ஆண்டில் மட்டும் மரியா கேம்போஸ் என்கிறவர் மடபகோஸ் தங்க இடம் கொடுத்தார். அவரும் மடபகோஸ்ஸை கட்டுப்படுத்தவெல்லாம் இல்லை. விரும்பிய இடத்துக்கு மடபகோஸ் செல்லலாம். தெருக்களைச் சுற்றலாம். பல நாட்களுக்கு வராமல் கூட இருக்கலாம். தங்கவென தேடி வந்தால் மட்டும் அவரின் வீடு மடபகோஸ்ஸுக்கு திறந்திருக்கும்.

தங்குமிடத்துக்கு அருகே பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அதிகம் இருந்தன. அதன் காரணமாக மடபகோஸ் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்தான் அதிகம் இருக்கும். அரசை எதிர்க்கும் மாணவர்களின் நட்பை அங்கு பெற்றது. அவர்களின் கோபத்தையும் மடபகோஸ் பகிர்ந்து கொண்டது.

மடபகோஸ்ஸுக்கு தங்குமிடம் வழங்கியவர் சொல்கையில், போராட்டங்கள் நடந்த நாட்களின் காலைகளில் வெளியே செல்ல, பெரும் ஆர்வத்துடன் மடபகோஸ் இருந்ததாக குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் மடபகோஸ்ஸுக்காக அவர் கடவுளை வேண்டிக் கொண்டு வெளியே அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார். கதவை திறந்து விட்டதும் மடபகோஸ் நேரே போராட்டங்கள் நடக்கும் திசையை நோக்கித்தான் பாய்ந்தோடுமாம்.

மடபகோஸ்ஸின் வேலை ஒன்றே ஒன்றுதான். மாணவர்களுடனே இருக்கும். காவலர்களைப் பார்த்தால் குரைக்கும். பாயும்.

எந்த மாணவரையும் பார்த்து மடபகோஸ் குரைத்தது கூட இல்லை. கண்ணீர் புகைக்குண்டுகளோ நீர் பாய்ச்சுதலோ மடபகோஸ்ஸை அச்சுறுத்தவில்லை. காவல் தடுப்புகளை தாண்டி குதிப்பதும் காவலர்களை நோக்கிக் குரைப்பதும் நீர் பாய்ச்சும் வாகனங்களை விரட்டுவதும் என மடபகோஸ்ஸின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களை நிரப்பின.

அரச எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்த்த அடையாளமாக மாறிப் போனது மடபகோஸ்.

சிலி நாட்டு மக்கள் மடபகோஸ்ஸை உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாகப் பார்க்கிறார்கள். சமத்துவத்தை மறுக்கும் அரசை எதிர்க்கும் சமத்துவத்துக்கான பிரதிநிதியாக மடபகோஸ் பார்க்கப்படுகிறது. ஒரு படி மேலே சென்று சோசலிஸ்ட் என்று கூட மடபகோஸ் அழைக்கப்படுகிறது. அதன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட சிவப்புத் துணிக்கு காரணமும் அதுதான். சிவப்புக்கு பின்னிருக்கும் தத்துவம் சோசலிசம்.

தொடர்ந்து அடுத்தடுத்த போராட்டங்களிலும் மடபகோஸ் கலந்து கொண்டது. அரச எதிர்ப்பையே வாழ்க்கையாக கொண்டிருந்தது. ஆனால் முழுமையாக வாழ்க்கையை வாழ்ந்து முடித்தது. ஆம். போராட்ட நாய் என அடையாளப்படுத்தப்படும் மடபகோஸ் இப்போது இல்லை. உயிரிழந்துவிட்டது. 2017ஆம் ஆண்டில் இயற்கை எய்தியது.

யாரும் அடித்தோ கொன்றோ இறக்கவில்லை. இயற்கை மரணம்தான். உடல்தான் மறைந்ததே தவிர மடபகோஸ் அடையாளப்படுத்திய எதுவும் மறையவில்லை. அந்த அடையாளங்கள் அதிகாரம் இருக்கும் வரை தொடர்ந்து உருவாகும்.

Also Read: உலகையே ஈர்த்த மிகப்பெரும் நடிகையின் அழியாத சோகம்... யாரை கடைசியாக அழைத்தார் மர்லின் மன்றோ?