உலகம்

"இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா": சிறையிலிருந்து தப்பிய கைதி 30 ஆண்டுகளுக்குப் பின் சரண்- காரணம் என்ன?

யூகோஸ்லேவியா நாட்டைச் சேர்ந்தவர் டர்கோ டக்கி டெசிக் (Darko Dougie Desic ). இவர் கஞ்சா வளர்த்த குற்றத்திற்காக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் போலிஸார் இவரை கைது செய்தனர். மேலும் இந்த குற்றத்திற்காக இவருக்கு மூன்று ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர், சிறையில் 13 மாதங்கள் தண்டனை பெற்ற டக்கி டெசிக், 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையிலிருந்து தப்பித்துவிட்டார். இவரைக் கண்டுபிடிக்க போலிஸார் பல்வேறு முயற்சிகள் செய்தனர்.

ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்ற சின்ன துப்பு கூட போலிஸாருக்கு கிடைக்கவில்லை. அந்தளவிற்கு டெசிக், போலிஸ் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாகவே வாழ்ந்துவந்தார்.

இந்நிலையில் 29 ஆண்டுகள் கழித்து டெசிக் தாமாகவே முன்வந்து சரணடைந்ததால் போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கொரோனா அச்சம் காரணமாகவே இவர் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

சிறையிலிருந்து தப்பித்த டெசிக், சிட்னிக்கு வந்துள்ளார். அங்கு கட்டிட வேலை உள்ளிட்ட சின்ன சின்ன வேலைகளைச் செய்து தனது தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார். மேலும் அரசின் சலுகைகள் பெற்றால் தாம் கண்டுபிடிக்கப்படுவோம் என்பதால் எந்த ஒரு சலுகையும் பெறாமலேயே இருந்து வந்துள்ளார்.

எங்கு சென்றாலும் நடந்தே சென்றுள்ளார். தான் யார் என்பது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகக் கடந்த 29 வருடங்களாக மருத்துவமனைக்குக் கூட செல்லாமல் இருந்துள்ளார் டெசிக்.

தற்போது ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் வேலை கிடைக்காமல் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் வீதிக்கு வந்துள்ளார். கடற்கரையில் படுத்துத் தூங்கி வந்த டக்கி டெசிக் இப்படி இருப்பதற்குப் பதில் சிறைக்கே சென்றுவிடலாம் என நினைத்து தற்போது போலிஸில் சரணடைந்துள்ளார்.

டெசிக்கை சுதந்தர மனிதராக பார்க்க வேண்டும் என்று அவர் வசித்த பகுதி மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக இதுவரை 25 ஆயிரம் அமெரிக்க டாலர் திரட்டியிருப்பதோடு அவருக்கு ஆதரவாக வாதாட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரையும் நியமித்துள்ளனர்.

Also Read: ஃபேஷன் ஷோவை அரசியல் மேடையாக மாற்றிய இளம் பெண் எம்.பி : அப்படி என்ன செய்துவிட்டார்?