உலகம்

“ஆக்கஸ் ஒப்பந்தம்.. அச்சுறுத்தல் இருந்தால் பதிலடி கொடுப்போம்” : அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த வட கொரியா!

‘ஆக்கஸ்’ என்ற பெயரில் (AUKUS) பாதுகாப்பு உடன்பாடு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையே சில தினங்களுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்படி பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்க இருக்கின்றன.

சீனாவைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய உடன்பாடு, எதிர்பாராத இடத்தில் இருந்து அமெரிக்காவுக்கு எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அது பிரான்ஸ். ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டுடன் ஆஸ்திரேலியா பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் உடன்பாட்டைச் செய்து கொண்டிருக்கிறது.

‘ஆக்கஸ்’ உடன்பாடு கையெழுத்தானதால், பிரான்ஸ் நாட்டுடனான உடன்பாடு முறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆக்கஸ் உடன்பாடு பொதுவெளியில் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் அது பற்றி பிரான்சிடம் தெரிவிக்கப்பட்டதாக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. “சற்றும் பொறுப்பில்லாதது” என்றும், “குறுகிய மனப்பாங்கு” கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.

“பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆயுதப் போட்டியை உருவாக்கும்” என சீனா அண்மையில் கூறியிருந்தது. “இது காலாவதியான பனிப்போர் மனநிலை” என்றும் குற்றம்சாட்டியிருந்தது. சீனாவைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை வடகொரியா கடுமையாக எதிர்த்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக வட கொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், “இது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம் சீர்குலைக்கும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் இடையேயான ஏற்பாடு மிகவும் ஆபத்தானது. மேலும் இந்த ஒப்பந்தத்தை வடகொரியா உன்னிப்பாக கண்காணித்து வருவகிறது.

இது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்குமேயானால் தக்க பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் ஆக்கஸ் ஒப்பந்த முயற்சி உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பசிக்குது சோறு போடு” : சாப்பாடு இல்லை என்று கூறிய தாயைக் கொன்ற கொடூர மகன் - குடிபோதையில் நடந்த விபரீதம்!