உலகம்

விண்வெளி சுற்றுலா சென்று பூமிக்கு திரும்பிய 4 பேர்.. வரலாறு படைத்த எலான் மஸ்க்.. இனி அடுத்தடுத்து பயணம்?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் ஆய்வாளர்களின் அசாத்திய முயற்சிகளால் விண்வெளிக்கு ஆய்வுக்காக மட்டுமல்லாமல் சுற்றுலாவும் செல்லலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவிலிருந்து 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாவாக சென்றனர். பூமியிலிருந்து 585 கிலோ மீட்டர் அப்பால் சென்ற 4 பேரும் அங்கிருந்து பூமிப்பந்தை கண்டு ரசித்தனர். இந்த பயண திட்டத்துக்கு 'இன்ஸ்பிரேஷன்-4' எனப் பெயரிடப்பட்டிருந்தது.

தொழிலதிபர் ஜாரிட் ஐசக்மேன், மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ், அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரர்‌ கிறிஸ் செம்ப்ரோஸ்கி, புவிஅறிவியல் வல்லுநர் சியான் பிராக்டர் ஆகிய 4 பேரும்தான் 3 நாட்கள் பூமியை பூமிக்கு அப்பாலிருந்து ரசித்துள்ளனர்.

3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா அருகிலுள்ள அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் இறங்கினர். உற்சாகத்தில் திளைத்த அவர்கள் படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

விண்வெளி சுற்றுலா வெற்றிகரமாக தொடங்கியிருப்பதால் அடுத்தடுத்து மேலும் பல விண்வெளி சுற்றுலா பயணங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C48 : இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மணி மகுடம் !