உலகம்

உணவுப் பஞ்சம் நோக்கி நகரும் இலங்கை.. கடுமையான விலை உயர்வு.. இலங்கை மக்களின் இன்னல்களுக்கு யார் காரணம்?

அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், 2009 இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின் சில ஆண்டுகளாக தொடர்ந்து சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாத் துறையின் முடக்கம் போன்றவைகளினால் ஏற்பட்ட பாதிப்பால் இலங்கையின் பொருளாதாரம் கடும் சரிவுகளை சந்தித்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பதவியேற்றது. ஆரவாரமாக அவர் பொறுப்பேற்றவுடன் அந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் சரிந்து சிக்கலான நிலைக்குச் சென்றது.

இலங்கை மத்திய வங்கிகளின் தரவுகளின்படி 2019-ஆம் ஆண்டு 7.5 பில்லியன் டாலராக இருந்த அன்னிய செலவாணி கையிருப்பு கடந்த ஜூலை மாத நிலையில், வெறும் 2.8 பில்லியன் டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.5 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

இவற்றை வேறு வழியில் சமாளிக்க தெரியாத இலங்கை அரசு, ரூபாயின் மதிப்பை அதிகரிக்க, இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதுடன், வராக்கடனை வசூல் செய்வதில் தீவிரம் காட்டியது. தொடர்ந்துக் குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பைச் சேமிக்க, பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. ஆனால், நிலைமை மோசமாகிக்கொண்டேதான் போகிறது.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யக்கூடப் பணம் இல்லாத சூழலில், இலங்கை அரசு தவித்து வருகிறது. இதனால் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு போர்க்காலத்தை விட தற்போது இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் உணவுப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துகொண்டே இருப்பதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நடவடிக்கைகளால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம், அரிசி, சர்க்கரை, பால் போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எதிர்கட்சிகள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். 1980-களில் இதுபோன்ற உணவுப் பஞ்சம் நிகழ்ந்தபோது தமிழர்களால் தான் எங்களுக்கு இந்த நிலைமை, அவர்கள் தான் எங்கள் மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கி வருகின்றனர் என்று அப்போதைய ஆட்சியாளர்கள் நீலிக் கண்ணீர் வடித்தனர். இன்று மக்கள் படும் துயரத்திற்கு என்ன காரணம் சொல்லப்போகிறார்கள் ராஜபக்‌ஷே குடும்பத்தினர்?

"பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற பொதுமொழியின் ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்து ஏமாற்றிக்கொண்டிருந்தவர்கள் இனிமேலாவது மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே தெற்காசிய அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

- தமிழரசன், பத்திரிகையாளர்

Also Read: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: சிறையில் உள்ள வாளையார் மனோஜிடம் விசாரணை - அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்?