உலகம்

ஒளிப்பதிவாளரைக் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட அமைச்சர்... தலை பாறையில் மோதி பலியான சோகம் - என்ன நடந்தது?

மலை உச்சியிலிருந்து தவறிவிழுந்த ஒளிப்பதிவாளரைக் காப்பாற்ற அமைச்சர் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் ரஷ்யாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் துறை அமைச்சராக பணியாற்றியவர் எவ்ஜெனி ஜினிச்சேவ் (55). இவர் ஆர்க்டிக் நகரமான நோரில்ஸ்கில் மீட்புக் குழுவினரின் பயிற்சி முகாமை பார்வையிட்டார்.

இந்த முகாமில் சுமார் 6,000 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒளிப்பதிவாளர் ஒருவர் ஜினிச்சேவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஒளிப்பதிவாளர் மலை உச்சியிலிருந்து தடுமாறி தண்ணீரில் விழுந்தார்.

அவரைக் காப்பாற்ற முயற்சித்து மலை உச்சியிலிருந்து தண்ணீரில் குதித்த ரஷ்ய அமைச்சர் ஜினிச்சேவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவை சேர்ந்த ஊடகவியாளர் மார்கரீட்டா சிமோன்யான் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமைச்சர் ஜினிச்சேவும், ஒளிப்பதிவாளரும் மலை உச்சியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, ஒளிப்பதிவாளர் திடீரென தவறி விழுந்தார்.

அங்கே என்ன நடக்கிறது என்று மற்றவர்கள் உணர்வதற்குள் ஜினிச்சேவும் மலை உச்சியில் இருந்து கீழே உள்ள தண்ணீரில் குதித்தார். ஆனால் அங்கே வெளியே நீட்டிக் கொண்டிருந்த பாறை ஒன்றில் அவரது தலை மோதியது. இதில் அவர் உயிரிழந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

ரஷ்யா அரசாங்கத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த ஜினிச்சேவ், ஒளிப்பதிவாளரைக் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ரயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு தரவேண்டும்” : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!