உலகம்

ஷூ’வையே போடவிடல.. இதுல எங்க இருந்து? ஆப்கனில் இருந்து தப்பியது ஏன் என விளக்கிய அஷ்ரப் கனி!

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்ததுமே அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி உடனடியாக தப்பியோடியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டருடன் தப்பிச் சென்றதாகவும், ஹெலிகாப்டரில் திணிக்கப்பட முடியாத மீதமிருந்த பணத்தை அப்படியே விட்டுச் சென்றதாகவும் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், லெபனான் என பல நாடுகளுக்கு அஷ்ரப் கனி தப்பியோடிவிட்டார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் தஞ்சமடைந்திருக்கிறார் என UAE அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் தாலிபன்களின் பிடியில் நாட்டு மக்கள் சிக்கி தவிக்கும் வேளையில் அஷ்ரப் கனி சுயநலமாக செயல்பட்டுள்ளார் என பொது மக்கள், அரசியல் தலைவர்களின் கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அபுதாபியில் தஞ்சமடைந்த அஷ்ரப் கனி தனது ஃபேஸ்புக் மூலம் ஆப்கானிஸ்தானைவிட்டு தப்பியோடியது ஏன் என விளக்கமளித்திருக்கிறார். அதில், “தாலிபன்களால் ஏற்படும் வன்முறைகளை தவிர்க்கப்பட வேண்டும். நான் காபூலிலேயே இருந்திருந்தால் கண்டிப்பாக வன்முறை வெடித்திருக்கும்.

கடந்த 1996ம் ஆண்டு முன்னாள் அதிபர் நஜிபுல்லாவை எப்படி சித்தரவதை செய்து கொன்றார்களோ அது போன்ற அசம்பாவிதத்தை தவிர்க்கவே பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுச் சென்றனர். மேலும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாக பரவும் செய்திகள் எவையும் உண்மைக்கு புறம்பானது.

எனது காலணிகளை கூட அணிந்துக்கொள்ள எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மீண்டும் நாடு திரும்புவது குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறேன். தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்கவே நான் விரும்பினேன்.” இவ்வாறு அஷ்ரப் கனி கூறியுள்ளார்.

Also Read: “நான் இங்கேயேதான் இருக்கேன்” : தாலிபான்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்கன் துணை அதிபர்!

Also Read: 4 கார்கள் நிறைய பணம்.. ஹெலிகாப்டரில் ஆப்கன் அதிபர் தப்பியது எப்படி? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ரஷ்யா!