உலகம்

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறப்பட்ட பெண் கைது? - நடந்தது என்ன!?

தென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தி உலகம் முழுவதும் தீயாகப் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதேவேளையில், இதுதொடர்பாக சந்தேகமும் எழுந்தது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் 37 வயதான பெண்மனி சிதோலே. இவர் அண்மையில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக செய்திகள் வெளியாகி வைரலானது. இதனால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

அந்தப் பெண்மணியின் தோழி ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில், தன் தோழி சிதோலேவுக்கு பிரிட்டோரியா மருத்துவமனையில் 10 குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். அதேபோல், சிதோலே அளித்த பேட்டியிலும் தன் கர்ப்ப காலத்தில் மிகவும் அவதிப்பட்டதாகவும், பல இரவுகளில் தூங்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவருக்கு ஏற்கனவே, ஆறு வயதுள்ள இரட்டைக் குழந்தைகள் இருப்பதாவும், அதன்படி தற்போது பிறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைகளுடன் மொத்தம் 12 குழந்தைகளை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே பிரிட்டோரியா மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் ஒன்றை அளித்தது.

அதில், நாங்கள் சிதோலே என்ற பெண்ணுக்கு எந்த வித சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும் தங்கள் மருத்துவமனையில் அப்படியொரு பிரசவம் நடைபெறவில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து அந்த பெண்மணி தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், அந்தப் பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்டது பொய் என்றும் நன்கொடை பெறுவதற்காக பொய் கூறியதும் தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி அன்று அதிகாலை ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ராபி ரிட்ஜின் பகுதியில் சிதோலேவை அந்நாட்டு போலிஸார் கைது செய்தனர். மேலும் அந்தப் பெண்மணி 10 குழந்தைகள் பெற்றெடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதனையும் தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிறையில் உள்ள சிதோலேவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுதொடர்பான உண்மை தகவல்கள் விரைவில் முழுமையாக தெரியவரும் என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Also Read: தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் பெண் ஆட்சியர்கள்... மகளிர் நிர்வாகத்திறனை நம்பும் அரசு!