உலகம்

“பணம் இல்லாததால் குறைந்த அளவே தடுப்பூசி பயன்படுத்தும் ஏழை நாடுகள்” - WHO இயக்குநர் கவலை!

உலக மக்களைக் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகமே கொரோனாவின் பிடியிலிருந்து வெளியே வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னும் கொரோனா வைரஸ் பரவலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சில வாரங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. படுக்கை, ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் மக்கள் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். மேலும் 24 மணி நேரமும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் எரிந்துகொண்டே இருக்கிறது. இந்தியா சந்தித்து வரும் இந்த நெருக்கடியை உணர்ந்து பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதற்கிடையே கொரோனா தடுப்பூசிகளும் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மக்களைக் காப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே அதிகம் கிடைப்பதாகவும், ஏழை நாடுகளுக்கு இன்னும் போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

போர்ச்சுகல் நாட்டில் காணொலி காட்சி மூலம் சுகாதார மாநாடு நடைபெற்றது. இதில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இதுவரை போடப்பட்டுள்ளன. இதில் 82 விழுக்காடு தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் வருவாய் குறைந்த ஏழை நாடுகளில் இவரை 0.3 விழுக்காடு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசிக்கும், கொரோனா வைரஸ் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கிலாந்தில் பொது சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் மூலம் கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “காப்பாற்றவும் வக்கில்லை.. எரிக்கவும் வழியில்லை”- கொரோனாவால் பலியானவரின் சடலத்தைக் கடித்துக் குதறிய நாய்!