உலகம்
சூயஸ் கால்வாயின் வரலாறு... ஏற்கனவே இப்படி நிகழ்ந்துள்ளதா? கப்பலை மீட்காவிட்டால் என்ன நடக்கும்?
உலகமே கடந்த மூன்று நாட்களாக சூயஸ் கால்வாயைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலம் கொண்ட உலகிலேயே மிகப் பெரிய ராட்சத சரக்கு கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயின் பாதையை அடைத்தபடி தரைதட்டி நிற்பதுதான்.
ஒரு கப்பல் தரைதட்டி நின்றதற்காகவா உலகமே இதைப் பற்றி பேசுகிறது என்று நாம் சாதாரணமாகக் கேட்டுவிடலாம். ஆனால் இந்த ராட்சத கப்பலை அகற்றவில்லை என்றால் பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும். கச்சா எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விலை தினந்தோறும் மின்னல் வேகத்தில் உயரும். இதனால்தான் சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் கப்பலால் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
தரைதட்டி நிற்கும் ராட்சத கப்பல் எது? சூயஸ் கால்வாயின் வரலாறு என்ன என்பன குறித்துப் பார்ப்போம்.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருப்பது இந்த சூயஸ் கால்வாய் தான். இந்த கால்வாய் மட்டும் இல்லையென்றால் ஆசியாவிலிருந்து ஆப்ரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் ஆகும். இந்த நாட்களை குறைப்பதற்காகவும், விரைந்து செல்வதற்காகவும் எல்லா வணிகக் கப்பல்களும் இந்த சூயஸ் கால்வாயைப் பயன்படுத்துகின்றன. இந்த கால்வாய் வழியாக ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் கப்பல்கள் பயணிக்கின்றன.
அந்தவகையிலேயே கடந்த 23ம் தேதி சுமார் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட எவர் கிவன் என்ற ராட்சத கப்பல் நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சீனாவிலிருந்து புறப்பட்டு, மலேசியா வழியாக மார்ச் 23ம் தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. அப்போது வேகமாக வீசிய காற்றால், எவர் கிவன் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்றது. கப்பலை அகற்ற எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், ஒரு சின்ன அசைவு கூட இல்லாமல் அப்படியே நிற்கிறது இந்த ராட்சதக் கப்பல்.
சூயஸ் கால்வாய் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டப்படவில்லை. கிட்டத்தட்டட 15 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அடிமை தொழிலாளர்களின் உழைப்பால் உருவானது தான் சூயஸ் கால்வாய். சூயஸ் கால்வாய்க்கான கட்டுமானப் பணி 1859ம் ஆண்டு தொடங்கி, 10 வருடங்கள் கழித்து 1986ம் ஆண்டு, நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. கால்வாயின் கட்டுமான பணிகளின்போது, ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் காலரா போன்ற கொடிய நோய்களால் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கால்வாய் கட்டப்படும் சமயத்தில் எகிப்து நாடு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. எனவே, காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் பல எதிர்ப்புகள் இருந்தன. அது கட்டுமானத்தை வெகுவாக பாதித்தது.
1956ம் எகிப்தின் அதிபராக இருந்த கமால் அப்துல் நாசீர், சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி, டீரான் நீரிணையை மூடினார். இதனால் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எகிப்தின் மீது போர் தொடுத்தனர். பின்னர் ஐ.நா தலையிட்டதால் போர் முடிவுக்கு வந்தது. பிறகு,1967ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே நடைபெற்ற ஆறு நாள் போரால் சூயஸ் கால்வாய் மூடப்பட்டது.
அதேபோல், இரண்டு உலகப்போர்களின்போதும் பிரிட்டன், சூயஸ் கால்வாயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதன்பின் எகிப்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1956-ம் ஆண்டு படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன் பிறகு எகிப்தின் அதிபர் கமால் அப்துல் நசீரிடம் அதிகாரம் வந்தது.
இதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு, எகிப்து அரசு சூயஸ் கால்வாயின் விரிவாக்கப்பணியை செய்தது. பின்னர் முக்கியக் கடல்வழியை ஒட்டி 35 கி.மீ நீளத்தில் மற்றொரு பாதையையும் கட்டமைத்தது எகிப்து. எகிப்து நாட்டின் முயற்சியால் தான் கடலில், இருவழிப் போக்குவரத்து சாத்தியமானது. தற்போது இந்தக் கால்வாயை `சூயஸ் கெனால் அத்தாரிட்டி’ என்ற எகிப்து அரசுக்குச் சொந்தமான நிறுவனம்தான் கவனித்து வருகிறது.
இப்படி பல போர்களால் தடைபட்ட சூய்ஸ் கால்வாய், தற்போது ராட்சத கப்பல் ஒன்றால் தடைபட்டுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாகத் தினந்தோறும் 50 கப்பல்கள், 300 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சரக்குகளைச் சுமந்துகொண்டு கடக்கின்றன. மேலும் இந்தக் கால்வாயின் வழியாக ஓவ்வொரு மணி நேரமும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது.
அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், தரைதட்டி நிற்கும் ராட்சத கப்பலை மீட்க நீண்ட நாட்கள் ஆனால் உலகம் எவ்வளவு பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். மேலும் சூயஸ் கால்வாய் பிரச்சனை தீர்க்கப்படவில்லையென்றால் அது இந்தியாவையும் பெரிய அளவில் பாதிக்கும்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்