உலகம்

"உலகப் போர்களில் ஏற்பட்ட உயிரிழப்பை விட கொரோனா பலி அதிகம்" : அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேச்சு!

சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அலட்சிய நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இன்னும் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் உலகப் போர்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும், கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகம் என அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அதிபராகப் பொறுப்பேற்று, முதல்முறையாகத் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜோ பிடன்," ஓராண்டுக்கு முன்னர் நாம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோம். அப்போது அந்தத் தொற்றத் தடுத்து நிறுத்தாமல் நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் மவுனம் காக்கப்பட்டது. இதனால், தொற்று பரவல், உயிர்ப்பலிகள், அழுத்தம், தனிமை பல சோதனைகளைச் சந்தித்தோம்.

2019ம் ஆண்டு, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பலரின் வாழ்க்கையில் நினைவுச் சின்னமாக மாறியுள்ளது. ஒவ்வொருவரின் துயரமும் சற்றே வித்தியாசமாக இருந்தாலும் நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இழப்பைச் சந்தித்துள்ளோம்.

மேலும், 2020ம் ஆண்டு உயிர்பலிகள் நிறைந்த ஆண்டாகவும், நம் வாழ்வாதாரத்தைத் தொலைத்த ஆண்டாகவும் அமைந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 5,27,726 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் கொரோனா பலி அதிகம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: வறுமையை ஒழிப்போம் எனச் சொல்லிவிட்டு குடிசைகளை ‘ஒளித்துவைக்கும்’ பா.ஜ.க : குஜராத் அரசின் கேடுகெட்ட செயல்!