உலகம்

ஏமனின் அவலத்தை உலகத்துக்குக் காட்டிய 13 வயது சிறுமி : பட்டினியில் வாடும் 4 லட்சம் குழந்தைகள் !

ஏமன் நாட்டில் கடந்த 2015ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகக் கடுமையான உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இதனால் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் ஏமன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

சன்னி பிரிவைச் சேர்ந்த ஏமன் அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே ஏற்பட்ட மோதலே உள்நாட்டுப் போர் வெடிக்கக் காரணமாக இருந்துள்ளது. இதில், அதிபர் மன்சூர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த உள்நாட்டுப்போர் காரணமாக, ஏமன் மக்கள் பசியால் தினந்தோறும் வாடி வருகிறார்கள். சுத்தமான குடிநீர் கிடைப்பதே இவர்களுக்குச் சவாலான விஷயமாக மாறியுள்ளது. 3 மணி நேரத்துக்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு, ஒரு முறை 90 குடும்பங்கள் வீட்டை இழந்து வீதிக்கு வருவதாகவும், மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காலரா நோயினால் பாதிக்கப்படுள்ளதாக சமீபத்தில் வெளியான ஆங்கில நாளிதல் சுட்டிக்காட்டியுள்ளது. இப்படி ஒரு மோசமான நிலைக்கு ஏமன் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏமன் நாட்டில் பசியால் தவிக்கும் லட்சக்கணக்கான சிறுமிகளில் ஒருவர் அஹ்மதியா தாஹெர். 13 வயதாகும் இந்த சிறுமியின் மொத்த எடை வெறும் 11 கிலோ மட்டுமே. இதைப் பார்த்து உலகமே தற்போது அதிர்ச்சியடைந்துள்ளது.

சிறுமி அஹ்மதியாவின் தந்தை உள்நாட்டுப் போரில் உயிரிழந்துவிட்டார். இதனால் குடும்பம் வறுமையில் சிக்கியது. பல நேரம் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் தண்ணீரை மட்டும் குடித்து உயிர்வாழ்த்து வருகின்றனர். நல்ல ஊட்டச்சத்து உணவு கிடைக்காததால் அஹ்மதியாவின் உடல் மெலிந்து, எலும்பும், தோலுமாக மாறியது.

இதனால் மனவேதனையடைந்த சிறுமியின் தாய், நண்பர்கள் மற்றும் சிலரிடம் நன்கொடையாகப் பணம் பெற்றுக்கொண்டு, சகோதரருடன் நடந்தே சனா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அஹ்மதியாவை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

“ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இது இப்படியே தொடர்ந்தால், இந்த மோசமான நிலையைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என சனா நகர் மருத்துவமனைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு வார்டின் தலைவர் அப்துல் மாலிக் அல் வாகேடி மன வேதனையுடன் கூறியுள்ளார்.

ஏமன் நாட்டின் உள்நாட்டுப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை மோசமான நிலையைச் சந்தித்து வருவதாக உலக சுகாதார அமைப்பும், யுனிசெஃப் உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் வேளாண் அமைப்புகள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கொரோனா ஊரடங்கு : பள்ளி ஆசிரியரான 12 வயது சிறுமி - சர்வதேச அளவில் குவியும் பாராட்டுகள்