உலகம்

கொரோனா ஊரடங்கு : பள்ளி ஆசிரியரான 12 வயது சிறுமி - சர்வதேச அளவில் குவியும் பாராட்டுகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதுமே பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் இணையம் வழியில் மாணவர்கள் கல்விக் கற்று வருகின்றனர். கிராமப் புறமாணவர்களுக்கு இணைய வசதி இல்லாததால் இவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எகிப்து நாட்டின் கெய்ரோ பகுதியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள அட்மிடா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது ரீம் எல் கவ்லி என்ற சிறுமி, தனது கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பாடம் செல்லிக் கொடுக்கிறார். இவரிடம் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ரீம் கூறுகையில், ''கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. குழந்தைகள் தெருவில் விளையாடுவதற்குப் பதிலாக நாம் அவர்களுக்குக்கற்பிக்கலாமே என்று நினைத்தேன். தினந்தோறும் அதிகாலையில் எழுந்து, தொழுதுவிட்டு, அருகில் உள்ள குழந்தைகளுக்கு அரபி, கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பிப்பேன்.

ஆரம்பத்தில் நோட்டுப் புத்தகத்தில் கற்பித்தேன். கரும்பலகை கிடைத்தபிறகு அதில் சொல்லிக் கொடுத்தேன். இப்போது உள்ளூர் நிறுவனம் மூலம் வெள்ளைப் பலகையும் மார்க்கர் பேனாக்களும் கிடைத்துள்ளன. அவற்றின் மூலம் தற்போது கற்பித்து வருகிறேன்.

பெரியவளாகி, கணித ஆசிரியராகப் பணியாற்ற ஆசை. ஆரம்பத்தில் என்னுடைய சத்தம் உரத்துக் கேட்கும் என்பதால் அம்மாவுக்கு நான் கற்பிப்பதில் ஆர்வமில்லை. ஆனால் குழந்தைகள் கற்றுப் பலனடைவதைப் பார்த்தவர், நான் விரும்பும் வரை பாடம் எடுக்கலாம் என்று உற்சாகப்படுத்தினார்'' என்று தெரிவித்தார்.

ரீம் எல் கவ்லி, எங்களுக்கு எளிமையாகவும், புரியும் படியும் பாடம் எடுப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 12 வயது ஆசிரியர் ரீம் எல் கவ்லி கற்பிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.