உலகம்

Cancer Day: மார்பக புற்றுநோயில் முன்னிலை வகிக்கும் தமிழகம்... சுகாதாரத்துறை விருது பெற்ற லட்சணம் இதுதான்!

உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி நான்காம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. புற்றநோயால் பாதிக்கப்படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச அளவில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த புற்று நோய் பற்றிய கல்வியினை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1993ல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) கடந்த 2000ம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை அறிவித்தது. உலகளவில் புற்றுநோய் விழிப்புணர்வை பரப்புவதற்கான முயற்சிகளில் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் UICC-ஐ ஆதரித்து வருகின்றன. பாரிஸில் நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில்தான் இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டும் 10 கட்டுரைகளைக் கொண்ட ஒரு ஆவணத்தை உருவாக்கினர். இந்த ஆவணம் புற்றுநோய்க்கு எதிரான Charter of Paris என்று அழைக்கப்பட்டது. உலகளவில் புற்றுநோய் ஆராய்ச்சி, தடுப்பு மற்றும் சிகிச்சையின் முன்னேற்றங்களில் நிலையான முதலீடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

UICC அமைப்பு ஆண்டு முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுகிறது. மேலும் இந்த தினத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், UICC சுகாதார அமைப்பு புற்றுநோய் நிறுவனங்களுடன் இணைந்து புற்று நோயாளிகளுக்கான கல்வி நடவடிக்கைகளை வகுத்தல், பொது சேவை அறிவிப்புகளை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் UICC இந்த தினத்திற்கு ஒரு கருப்பொருளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ‘I can, we can’ என்பது தீர்மானமாக இருந்தது. புற்றுநோய் சுமையை எதிர்த்து என்னால் போராட முடியும். நம் அனைவராலும் போராட முடியும் என்பது தான் அதன் அர்த்தம். எனவே, புற்றுநோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கவும், ஆரம்பகால நோயறிதல், சிகிச்சைகள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையின் சவால்களை சமாளிக்கவும் நம்மால் முடியும். அதன்படி 2021ம் ஆண்டின் கருப்பொருள் என்னவென்றால்  ‘I Am and I Will’ என்பது தான். இதன் அர்த்தம் புற்றுநோயை எதிர்த்து இந்த போரில் வெற்றி பெறுவதற்கான திறனை நான் கொண்டுள்ளேன் என்பதாகும்.

புற்றுநோய் வகைகள்:

மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய், தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கணைய புற்றுநோய், விரைப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மல்டிப்பிள் மைலோமா, மூளைப் புற்றுநோய், கடைப்பெருங்குடல் புற்றுநோய் இப்படிப் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன.

இப்படி இருக்கையில், கடந்த, 2012ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி, உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர். ஒவ்வொரு வருடமும் புற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் மருத்துவமனைகளில் இல்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேபோல இந்தியாவில் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது என புற்றுநோய் மருத்துவ நிபுணரான சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த 2018ம் ஆண்டில் 10 ஆயிரத்து 269 பேருக்கும், 2016ல் 9,486 பேருக்கும், 2017ல் 9,870 பேருக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சென்னையில் மட்டுமே லட்சத்தில் 2 சதவிகித பெண்கள் மார்பக புற்றுநோயால் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு உடல் பருமன் உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக கூறப்படுகின்றன.

உத்தர பிரதேசத்தை (24,181) விட குறைவான அளவில் தமிழகத்தின் மார்பக புற்று நோயாளிகளின் எண்ணிக்கை இருந்தாலும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களை விட அதிகமான நோயாளிகளையே கொண்டிருக்கிறது. 2018ம் ஆண்டின் நிலவரப்படி அண்டை மாநிலமான ஆந்திரா, கேரள மாநிலங்கள் தமிழகத்தை விட மார்பக புற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் 40 சதவிகிதம் பின் தங்கியே இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தரவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க, கேரளாவின் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் புற்றுநோய் மையத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை தொடராமல் இருக்க தென் தமிழகத்தின் எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புற்றுநோய் மையம் அமைக்க முன்வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை அ.தி.மு.க அரசு துச்சமென எண்ணி வருகிறது.

ஆனால், சுகாதார துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசாங்கம் தமிழக சுகாதார துறைக்கு விருது வழங்கியதை மட்டும் எள்ளளவும் குற்றவுணர்ச்சி இல்லாமல் பெற்றிருப்பது விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Also Read: புகைப்பிடிக்கும் பழக்கமில்லாத இளம்பெண்ணுக்கு நுரையீரல் புற்றுநோய் : டெல்லி மாசுபாட்டால் பயங்கரம்!